2015-10-06 16:54:00

வறுமைக் கோட்டுக்குகீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 10% சரிவு


அக்.06,2015. உலகில் கடும் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டில் பத்து விழுக்காட்டுக்கும் கீழ் குறையவுள்ளதாகவும், 2030ம் ஆண்டுக்குள் உலகில் வறுமையை ஒழிக்கும் திட்டத்தை நோக்கி உலகு சென்று கொண்டிருப்பதை இது காட்டுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது

இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ள உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் அவர்கள், இன்றைய உலகில் இது ஒரு சிறந்த செய்தியாக உள்ளது என்றும், மனித வரலாற்றில் மக்கள் வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் நிலையை ஒழிக்கவுள்ள முதல் தலைமுறையாக நாம் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக பன்னாட்டு அளவில் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை இவ்வாண்டில் 70 கோடியே இரண்டு இலட்சமாகக் குறைந்துள்ளது, இது உலக மக்கள் தொகையில் 9.6 விழுக்காடாகும் என்றும் உலக வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலை கடந்த 2012ம் ஆண்டில் 13 விழுக்காடாகவும், 1999ம் ஆண்டில் 29 விழுக்காடாகவும் இருந்தது. வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், நலவாழ்வு, கல்வித்துறையில் அதிகளவிலான முதலீடும் இச்சரிவுக்கு முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருநாள் ஊதியம் 125 ரூபாய்க்கும் கீழ் உள்ளவர்கள் கடும் வறுமையின் பிடியில் உள்ளதாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

கிழக்காசியா, பசிபிக் பகுதி, தெற்காசியா, ஆப்ரிக்காவின் சஹாராவுக்குத் தெற்குப் பகுதியிலுள்ள வறிய மக்களின் எண்ணிக்கை உலகிலுள்ள மொத்த வறிய மக்களின் எண்ணிக்கையில் 95 விழுக்காடாக உள்ளது.

உலகில் வறுமைக் கோட்டுக்குகீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது  குறித்த முறையான அறிவிப்பை, இம்மாதம் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை(அக்டோபர்9-11) பெரு நாட்டின் லீமா நகரில் நடைபெறும் கூட்டத்தில் உலக வங்கி அறிவிக்கவுள்ளது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.