2015-10-06 16:39:00

அரசியலின் பெயரால் காட்டப்படும் காழ்ப்புணர்வை ஏற்க முடியாது


அக்.06,2015. இந்தியாவில் அரசியலின் பெயரால் காழ்ப்புணர்வு காட்டப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று கொல்கத்தா பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள் கூறியுள்ளார்.

காந்திஜியின் பிறந்த நாளை முன்னிட்டு கொல்கத்தாவின் புனித யோவான் ஆலயத்தில் நடைபெற்ற தேசிய செப நாள் நிகழ்வில் உரையாற்றிய பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள், அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மனிதர்களை மிகவும் முக்கியமானவர்களாக முன்னிறுத்தும் வித்தியாசமான தலைமைத்துவத்தை மகாத்மா காந்தி அவர்கள் நமக்குத் தந்துள்ளார் என்றும், தேவையில் இருப்போர் மற்றும் வறியவர்களின் நலவாழ்வுக்காக அவர் எப்போதும்   பெருமுயற்சி எடுத்தார் என்றும் கூறினார் பேராயர் தாமஸ் டி சூசா.

நாட்டின் எல்லைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரின் தியாகங்களையும் மக்கள் நினைத்துப் பார்த்து அங்கீகரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் கொல்கத்தா பேராயர்.

இந்தத்  தேசிய செப நாள் நிகழ்வில், எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளர் தலைவர் S. Salunke அவர்களும் கலந்து கொண்டார். 

ஆதாரம் : IANS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.