2015-10-06 16:29:00

14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்றாவது பொது அமர்வு


அக்.06,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரசன்னத்தில், இச்செவ்வாய் காலை தொடங்கிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்றாவது பொது அமர்வில் அனைத்துக் கண்டங்களிலிருந்தும் 72 மாமன்றத் தந்தையர் தங்களின் கருத்துக்களை வழங்கினர் என்று பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறினார் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.

இலத்தீன் அமெரிக்காவிலிருந்து பத்துப் பேர், வட அமெரிக்காவிலிருந்து ஏழு பேர், ஐரோப்பாவிலிருந்து 26 பேர், ஆப்ரிக்காவிலிருந்து 12 பேர், ஆசியா-ஓசியானியாவிலிருந்து 8 பேர் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து 6 பேர், இச்செவ்வாய் காலை பொது அமர்வுகளில் உரையாற்றினர் என்று அருள்பணி லொம்பார்தி கூறினார். 

பெரும்பகுதி உரைகள் இத்தாலிய மொழியிலும், ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிகளிலும் இடம்பெற்றன என்றும், இச்செவ்வாய் மாலை பொது அமர்வில் ஒரு மணி நேரம் கருத்துக்களைப் பகிர எல்லாரும் அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

திருமணச் சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தும், திருமண வாழ்விலும், குடும்பத்திலும் பெண்களின் பங்கு குறித்தும் இப்பொது அமர்வில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்றும், இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் கூறினார்.

இக்காலை பொது அமர்வில் கர்தினால் பால்திச்சேரி அவர்கள் இம்மாமன்றத்தின் நடைமுறைகளை முதலில் விளக்கினார் என்றும், இதில் பல புதியவர்கள் கலந்துகொள்வதால் இந்த விளக்கம் தேவை என்றும், பொதுத் தொடர்பாளருக்கு உதவியாக திருத்தந்தை பத்துப் பேரை நியமித்துள்ளார் என்றும், இந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.