2015-10-05 16:37:00

தூய ஆவியாரின் செயலால் வழிநடத்தப்படுவதே ஆயர்கள் மாமன்றம்


அக்.05,2015. குடும்பம் குறித்த உலக‌ ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள், வெறுமனே பேசுவதோடு மட்டும் நில்லாமல், 120 கோடி உறுப்பினர்களைக் கொண்ட திருஅவைக்காக இறைவன் பேச விரும்புவதற்குச் செவிமடுக்க முயற்சிக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மூன்று வாரங்கள் கொண்ட இம்மாமன்றத்தின் முதல் பொது அமர்வில் இத்திங்கள் காலை 9 மணிக்கு தொடக்க உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஆயர்கள் மாமன்றம், விருந்தினரை உபசரிக்கும் ஓர் அறையோ, ஒரு பாராளுமன்றமோ அல்லது ஒரு செனட் அவையோ அல்ல, மாறாக, விசுவாசக் கண்களோடும், இறைவனின் இதயத்தோடும் உண்மையைக் கண்டறிவதற்கு ஒன்று சேர்ந்து செல்வதாகும், என்றார்.

இம்மாமன்றம், தூய ஆவியாரின் தூண்டுதலுக்குச் செவிமடுக்கும் இடமாகும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இதில் கலந்து கொள்ளும் ஆயர்கள், திருத்தூதர்களின் துணிச்சலையும், நற்செய்தி கூறும் மனத்தாழ்மையையும், விசுவாசம் நிறைந்த செபத்தையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். .

அக்டோபர் 4, இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையருடன் இணைந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி, குடும்பம் குறித்த இம்மாமன்றத்தை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“திருஅவையிலும், உலகிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும்” என்ற தலைப்பில் அக்டோபர் 04ம் தேதி முதல் 25ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறும்  14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் 74 கர்தினால்கள், 6 முதுபெரும் தந்தையர், உயர் பேராயர் ஒருவர், 72 பேராயர்கள், 102 ஆயர்கள், 2 பங்குத் தந்தையர் மற்றும் 13 துறவற சபையினர் என 270 மாமன்றத் தந்தையர்கள், இன்னும், 18 திருமணமானத் தம்பதியரும் கலந்து கொள்கின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.