2015-10-05 17:03:00

திருத்தந்தை : சுவராக இல்லாமல், அன்பின் சமூகமாக மாறுவோம்


அக்.05,2015. குழந்தைகளை இயேசு வரவேற்று ஏற்றுக்கொண்டதுபோல், அதே அன்புடன் பெற்றோரும், ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பசியால் வாடுகின்ற, கைவிடப்பட்ட, சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிற, போரில் ஈடுபடுத்தப்படுகின்ற, அன்பு மறுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் இந்தச் சமூகம் வரவேற்க வேண்டும் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புடன் வரவேற்கும் குடும்பமாக இந்தச் சமூகம் மாறவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தினார்.

ஏழ்மையாலும், மோதல்களாலும் துன்புறும் குழந்தைகளைக் காண்பது மிகப்பெரும் வேதனையைத் தருகின்றது என்ற திருத்தந்தை, நம் கதவுகளைத் தட்டும் இந்தக் குழந்தைகளுக்கு, நாம் சுவராக இல்லாமல், அன்பின் சமூகமாக மாறுவோம் என்றார்.

மேலும், தன் மூவேளை செப உரையின் இறுதியில், குவாத்தமாலாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், பிரான்சில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டோருக்காகவும் செபிக்குமாறும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

குவாத்தமாலாவின் Cambray பகுதி நிலச்சரிவில் 69 பேர் இறந்துள்ளனர், ஏறத்தாழ 350 பேர் காணாமல் போயுள்ளனர். பிரான்சின் வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் 12 பேர் இறந்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.