2015-10-05 17:30:00

கடுகு சிறுத்தாலும்... எரியும் கனவிலும் தெரியும் அழைப்பு


கப்பல் ஒன்று கடலில் மூழ்கியபோது, அதிலிருந்து ஒரே ஒருவர் மட்டும் தப்பித்து, அருகிலிருந்த தீவுக்கு  சென்றார். மனித நடமாட்டம் எதுவும் இல்லாத ஒரு தீவு அது. கடவுளிடம் தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் வேண்டிவந்தார். ஏதாவது ஒரு கப்பல் அவ்வழியே வராதா என்று ஒவ்வொரு நாளும், கடற்கரையில் ஏங்கிக் கிடந்தார். பல நாட்கள் சென்றன. தனக்கென ஒரு குடிசை அமைத்து அதில் தங்கியிருந்தார்.

ஒரு நாள் அவர் தீவில் உணவு சேகரித்துவிட்டு திருப்பும்போது, இடி, மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. அவர் தன் குடிசையை நோக்கி ஓடினார். அவர் கண்முன்னே, அவரது குடிசையை ஒரு மின்னல் தாக்கவே, அது தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்து எழுந்த புகை வான் நோக்கி உயர்ந்தது. சிறிது நேரத்தில் மழையும் நின்றது.

இதைக் கண்டு அவருக்கு கடவுள் மேல் பெரும் கோபம் வந்தது. தன்னைக் காப்பாற்ற மனமில்லை என்றாலும், தன்னை அந்தக் குடிசையில் தங்குவதற்கு அனுமதித்திருக்கலாமே என்று அவர் கடவுளைக் குறை சொன்னார்.

சிறிது நேரம் சென்று, தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது. அதைக் கண்டதும் அவருக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி.

தான் அங்கிருப்பது அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்று அவர் வியப்புடன் கேட்டார். அவரைக் காக்க வந்தவர்கள், "நீங்கள் உருவாக்கிய புகை எங்கள் கவனத்தை ஈர்த்தது" என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.

அடுத்த முறை நமது கனவுகள் எரிந்து சாம்பலாவதைப் போல் உணர்ந்தால், அது விண்ணை நோக்கி எழும் ஒரு புகை அடையாளம் என்று எண்ணிப் பார்க்கலாம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.