2015-10-03 16:41:00

கார்பன் வெளியேற்ற அளவை 35 விழுக்காடு குறைக்க இந்தியா உறுதி


அக்.03,2015. இந்தியாவிலிருந்து வெளியாகும் கார்பன் வாயுக்களின் அளவை 2030ம் ஆண்டுக்குள் 33 முதல் 35 விழுக்காடு வரை குறைப்பதற்கு ஐ.நா.வில் உறுதியளித்துள்ளது இந்தியா.

உலகில் கார்பன் வாயுவை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் மூன்றாவது இடத்திலுள்ள இந்தியா, 2005ம் ஆண்டில் இருந்த இந்த அளவுகளிலிருந்து 2030ம் ஆண்டில் 35 விழுக்காடு வரை குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் Prakash Javadekar அவர்கள், இந்தியா தனக்குத் தேவையான மின்சாரத்தில் 40 விழுக்காட்டை நிலக்கரி மற்றும் எரிவாயுவைப் பயன்படுத்தாமல் சூரிய சக்தி, காற்று ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்போவதாகவும்  கூறினார்.

வருகின்ற நவம்பர் இறுதியில் பாரிஸ் மாநகரில் இடம்பெறவிருக்கும் பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டை முன்னிட்டு, இந்தியா உட்பட 146 நாடுகள் கார்பன் குறைப்பு குறித்த தங்களின் தேசிய திட்டங்களை ஐ.நா.வில் சமர்ப்பித்தன. புவியை வெப்பமாக்கும்  கார்பன் வெளியேற்றத்தில் 87 விழுக்காட்டுக்கு இந்த 146 நாடுகளும் பொறுப்பாகும்.

காந்திஜியின் பிறந்த நாளில் இந்தியா ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ள இத்திட்டத்தைச் சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுக்கள் வரவேற்றுள்ளன.

ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்கு புவியை வெப்பமாக்கும் வாயுக்களைக் குறைக்கப் போகின்றன என்ற தகவலை, 193 உறுப்பு நாடுகளிடமும் ஐ.நா. கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.