2015-10-03 16:36:00

காந்திஜியின் வன்முறையற்ற வாழ்வு அனைவருக்கும் எடுத்துக்காட்டு


அக்.03,2015. இந்தியாவின் விடுதலைத் தலைவர் காந்திஜி அவர்கள் முன்வைத்த எடுத்துக்காட்டான வாழ்வு இக்காலத்திற்கு அதிகம் தேவைப்படுகின்றது, வன்முறையற்ற மற்றும் அனைவரின் மாண்புக்காக உழைப்பதற்கு உலகினர் எல்லாரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன்.

காந்திஜியின் பிறந்த நாளான அக்டோபர் 02, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வன்முறையற்ற தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், சண்டைகளும், தீவிரவாதமும், புலம் பெயர்வுகளும், மனிதாபிமானத் தேவைகளும்  அதிகரித்துள்ள இக்காலத்தில் காந்திஜியின் வாழ்வு நம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது என்று கூறியுள்ளார்.

வன்முறையற்ற கொள்கையும், நடைமுறையும் வரலாற்றை மாற்றும் என்பதை காந்திஜி நிரூபித்துள்ளார் என்றும், அவரின் வன்முறையற்ற ஒத்துழையாமை  இயக்கம் இந்தியாவுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன். கல்வி மற்றும் விழிப்புணர்வு வழியாக வன்முறையற்ற செய்தியை உலகுக்குப் பரப்பும் நோக்கத்தில், ஐ.நா. பொது அவை, 2007ம் ஆண்டு ஜூனில், அக்டோபர் 02ம் தேதியை, உலக வன்முறையற்ற தினமாக உருவாக்கியது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.