2015-10-03 16:16:00

உலக ஆயர்கள் மாமன்றம் தனிநபர் மீது அதிக அக்கறை காட்டும்


அக்.03,2015. வத்திக்கானில் தொடங்கவிருக்கின்ற குடும்பம் குறித்த இந்த 14வது உலக ஆயர்கள் மாமன்றம், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குக் கவனம் செலுத்துவதைவிட தனிநபர்மீது அதிக அக்கறை காட்டும் என்ற தனது எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளார் மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ.

உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்வதற்காக உரோம் வந்துள்ள யாங்கூன் பேராயர் கர்தினால் போ அவர்கள், யாங்கூனில் இம்மாமன்றம் குறித்து UCA செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இரக்கத்தின் ஜூபிலி ஆண்டில் எந்த ஒரு மனிதரும் சமுதாயத்தினின்று ஒதுக்கப்படக் கூடாது, சமுதாயத்தினின்று விலக்கிவைக்கப்படக் கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லியிருக்கிறார், திருஅவையும், பாவிகள் மீது இரக்கம் காட்டும் என்றும் கூறினார் கர்தினால் போ.

ஒரே பாலினத் திருமணங்கள் விவிலியத்திற்கும், இயற்கைக்கும் எதிராகச் செல்பவை, இவை சட்ட முறைப்படி அங்கீகரிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும் கூறினார் கர்தினால் போ.

மறுதிருமணம் செய்துகொண்ட தம்பதியரில் பலர், பல ஆண்டுகளாக அத்திருமணத்திற்குப் பிரமாணிக்கமாக வாழ்கின்றனர், ஆனால் அவர்கள் திருநற்கருணை வாங்க முடியாது என்றுரைத்த கர்தினால் போ அவர்கள், இத்தகைய தம்பதியர் திருநற்கருணை வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவது குறித்து திருஅவை சிந்திக்க வேண்டும் என்ற தனது ஆவலையும் வெளியிட்டார்.

இரக்கத்தின் ஜூபிலி ஆண்டு, அமல அன்னை விழாவான வருகிற டிசம்பர் 8ம் தேதி தொடங்கி, 2016ம் ஆண்டு நவம்பர் 20, கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.