2015-10-03 16:01:00

அன்றாட வாழ்வுப் போராட்டத்தில் இயேசு நமக்கு உதவுகிறார்


அக்.03,2015. இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் காவல்துறையினருக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரலாறு முழுவதும் காணப்படும் நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போர் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

இந்தப் போர், கிறிஸ்தவர் மற்றும் கிறிஸ்தவர் அல்லாதவர் என அனைவர் இதயங்களில் ஒவ்வொரு நாளும் இடம்பெற்று வருகின்றது, நாம் இவையிரண்டில் நாம் விரும்புவதை தேர்ந்தெடுக்க வேண்டும், இவை இரண்டுமே முற்றிலும் ஒன்றுக்கொன்று எதிரான பகைவர்கள் என்று கூறினார் திருத்தந்தை.

இயேசு பாலைநிலத்தில் அலகையினால் சோதிக்கப்பட்ட நிகழ்வு பற்றி விளக்கிய திருத்தந்தை, சாத்தான் கவர்ச்சியானவைகளால் நம்மை மயக்கும், சாத்தான் விதைக்கும் தீமைகளில் நாம் வீழ்ந்து விடாமல் இருப்பதற்கு இயேசுவிடம் அருள் வேண்டுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் காவல்துறையினரின் பாதுகாவலரான அதிதூதர் மிக்கேல் அவர்கள் பற்றியும், அதிதூதர் மிக்கேல் அவர்கள் தலைமையில் அலகைக்கு எதிராக நடத்தப்படும் போர் குறித்து திருவெளிப்பாட்டு நூலில் சொல்லப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பணம், செல்வம், தற்பெருமை, செருக்கு போன்ற ஊழல்களின் சோதனைகளில் வீழ்ந்து விடாதிருப்பதற்கு இயேசுவிடம் மன்றாடுவோம் என்றும், நம் அன்றாட வாழ்வுப் போராட்டத்தில் இயேசு நமக்கு உதவுகிறார் என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.