2015-10-03 16:11:00

அக்டோபர் 4 வத்திக்கானில் உலக ஆயர்கள் மாமன்றம் ஆரம்பம்


அக்.03,2015. “விசுவாசம் எனக்கு மட்டும் வழங்கப்பட்ட கொடை அல்ல, ஆனால் விசுவாசம், மகிழ்வோடு பகிரப்படுவதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளது. திருத்தந்தையின் @Pontifex டுவிட்டர் பக்கத்திலுள்ள இச்செய்தியை 2 கோடியே 30 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

மேலும், அக்டோபர் 4, இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையருடன் இணைந்து கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி, குடும்பம் குறித்த இம்மாமன்றத்தை ஆரம்பித்து வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பம் குறித்த இந்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் 74 கர்தினால்கள், 6 முதுபெரும் தந்தையர், உயர் பேராயர் ஒருவர், 72 பேராயர்கள், 102 ஆயர்கள், 2 பங்குத் தந்தையர் மற்றும் 13 துறவற சபையினர் என 270 மாமன்றத் தந்தையர்கள், இன்னும், 18 திருமணமானத் தம்பதியரும் கலந்து கொள்வார்கள்.  

இந்த 270 பேரில் திருஅவையில் பொறுப்பு காரணமாக 42 பேர், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 183 பேர், திருத்தந்தையால் நியமிக்கப்பட்டவர்கள் 45 பேர் என்றும், இவர்களில் 54 பேர் ஆப்ரிக்காவையும், 64 பேர் அமெரிக்காவையும், 36 பேர் ஆசியாவையும், 107 பேர் ஐரோப்பாவையும், 9 பேர் ஓசியானியாவையும் சேர்ந்தவர்கள்.

மேலும், இம்மான்றத்திற்குத் தயாரிப்பாக, இத்தாலிய ஆயர் பேரவை, இச்சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, குடும்பம், நம்பிக்கையின் தொழிற்சாலை என்ற தலைப்பில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருவிழிப்பு வழிபாடு ஒன்றை நடத்துகிறது. இதில் மாலை ஏழு மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  மறையுரையாற்றுகிறார்.

“திருஅவையிலும், உலகிலும் குடும்பத்தின் அழைப்பும், பணியும்” என்ற தலைப்பில் அக்டோபர் 04ம் தேதி முதல் 25ம் தேதி வரை 14வது உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் நடைபெறவிருக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.