2015-10-02 16:07:00

பருவநிலை மாற்றம் குறித்த மனுவில் ஆசிய ஆயர்கள் கையொப்பம்


அக்.02,2015. பருவநிலை மாற்றம் குறித்து வருகிற டிசம்பரில் பாரிசில் நடைபெறவிருக்கும் உலக மாநாட்டில் சமர்ப்பிப்பதற்கென உலகளாவிய கத்தோலிக்க இயக்கத்தால் நடத்தப்படும் மனுவை அங்கீகரித்து அதில் கையெழுத்து போட்டுள்ளனர் ஆசிய ஆயர்கள்.

ஹாங்காக்கில் அண்மையில் இடம்பெற்ற ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இம்மனு விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.

இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் வறட்சி, வெப்பக் காற்று உட்பட, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

மேலும், பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் உலக மாநாட்டில் விவாதிப்பதற்கென 147 நாடுகள் தங்களின் தேசியத் திட்டங்களைச் சமர்த்திருப்பதை இவ்வியாழனன்று வரவேற்றுள்ளார் ஐ.நா.பொதுச்ச செயலர் பான் கி மூன்.

கார்பன் வாயுக்கள் வெளியேற்றத்தில் 85 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட அளவுக்கு இந்நாடுகள் பொறுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும், இந்தியாவில் வெளியேற்றப்படும் கார்பனில் 40 விழுக்காட்டை 2030ம் ஆண்டுக்குள் குறைப்பதற்கு இந்தியா உறுதி அளித்துள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.