2015-10-02 15:44:00

காவல்தூதர்களை மதித்து அவர்களுக்குச் செவிமடுக்க வேண்டும்


அக்.02,2015. நமக்கு ஆலோசனை வழங்கி நம்மைப் பாதுகாப்பதற்கு இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல்தூதரை அளித்துள்ளார், மனத்தாழ்மையுடனும், மதிப்புடனும் அத்தூதருக்கு நாம் செவிமடுக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

காவல்தூதர்களின் விழாவான இவ்வெள்ளியன்று சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை,  நம் வாழ்வில் காவல்தூதர்களின் பிரசன்னம் குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

வானதூதர், இறைவனின் தூதராக நம் ஒவ்வொருவரோடும் இருக்கின்றார், இறைவன் ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டிய நிகழ்வில், இதற்குரிய சான்றை வாசிக்கிறோம் என்றுரைத்த திருத்தந்தை, அச்சமயத்தில் இறைவன் ஆதாமைத் தனியே விடவில்லை மற்றும் உன்னால் எவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமோ அதைச் செய்துகொள் என்றும் அவரிடம் கூறவில்லை என்றும் கூறினார்.

ஒவ்வொரு மனிதருக்கும் இறைவன் ஒரு காவல்தூதரை அளித்துள்ளார், அத்தூதர்  நம் அருகிலேயே இருக்கிறார், நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார், இத்தூதரின் பிரசன்னத்தை நாம் மதிக்க வேண்டும் என்று நம் ஆண்டவர் நம்மை அறிவுறுத்துகிறார் என்றும் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

காவல்தூதரின் பிரசன்னத்தை மதித்து அவர் பேசுவதை நாம் உற்றுக் கேட்பதற்கு நம் ஆண்டவரிடம் மனத்தாழ்மை என்னும் அருளுக்காக இத்திருப்பலியில் மன்றாடுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் நம் ஆண்டவரின் நட்புறவை இழந்தாலும், அவர் நம்மைத் தனியே விடுவதில்லை, அவர் நம்மைக் கைவிடுவதில்லை, அவர் எவ்வளவு நல்லவர் என்பதை நினைத்துப் பார்ப்போம் என்று மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.