2015-10-02 15:52:00

அக்.03, மாலையில் உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக வழிபாடு


அக்.02,2015. குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, அக்டோபர் 03, இச்சனிக்கிழமை மாலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் மாலை வழிபாடு நடைபெறும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அக்டோபர் 04ம் தேதி முதல் 25ம் தேதி வரை 14வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் விதம் குறித்து இவ்வெள்ளியன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கிய, உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திச்சேரி அவர்கள் இதனை அறிவித்தார்.

இத்தாலிய ஆயர் பேரவையால் நடத்தப்படும் இம்மாலை திருவிழிப்பு வழிபாட்டில் மாமன்றத் தந்தையர், மாமன்றத்தில் பங்கு கொள்வோர், திருஅவை இயக்கங்கள், பக்த சபைகள் மற்றும் உலகின் பல பாகங்களிலிருந்து விசுவாசிகள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறினார் கர்தினால் பால்திச்சேரி.

குடும்பங்களின் அழகை எடுத்துரைக்கும் விதமாகச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மாமன்றத் தந்தையருக்காகத் தூய ஆவியாரிடம் செபங்கள் எழுபப்படும் என்றும், அக்டோபர் 4, ஞாயிறு காலையில் மாமன்றத் தந்தையருடன் திருத்தந்தை கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி, இம்மாமன்றத்தை ஆரம்பித்து வைப்பார் என்றும் கர்தினால் பால்திச்சேரி அவர்கள் கூறினார்.

அக்டோபர் 18ம் தேதி வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் புனித குழந்தை தெரேசாவின் பெற்றோரைப் புனிதர்களாக அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், வத்திக்கான் ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் அரங்குக்கு அருகிலுள்ள சிற்றாலயத்தில் புனித குழந்தை தெரேசாவின் திருப்பண்டமும் வைக்கப்பட்டிருக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.