2015-10-01 16:17:00

புலம்பெயர்ந்தோர் உலக நாள், கருணை ஆண்டில் சிறப்பு பெற்ற நாள்


அக்.01,2015. குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாள், கத்தோலிக்கத் திருஅவை, கொண்டாடவிருக்கும் கருணை ஆண்டில் தனி சிறப்பு பெற்ற நாள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

2016ம் ஆண்டு, சனவரி 17, ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் குடிபெயர்ந்தோர் மற்றும் புலம் பெயர்ந்தோர் உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள ஓரு செய்தியை, குடிபெயர்ந்தோர் மற்றும் பயணிப்போர் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர், கர்தினால், அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டபோது, இவ்வாறு கூறினார்.

வருகிற கருணை ஆண்டில் இந்த உலக நாள், கடைபிடிக்கப்படும்போது, தலத்திருஅவை இந்த உலக நாளை, ஒரு யூபிலி நாளாகக் கடைபிடிக்கும் என்று, கர்தினால் வேலியோ அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

இச்செய்தியாளர்கள் கூட்டத்தில், இத்திருப்பீட அவையின் செயலர், பேராயர், ஜோசப் களத்திப்பரம்பில் அவர்களும் கலந்துகொண்டு, புலம்பெயர்ந்தோர் குறித்து தன் கருத்துக்களையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட்டார்.

குடிபெயர்தல் அனைத்துலக நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2015ம் ஆண்டு, இதுவரை, 5,22,134 பேர் புலம்பெயர்ந்தோராக ஐரோப்பாவிற்குள் நுழைந்துள்ளனர் என்றும், 2,892 பேர் கடல் பயணங்களில் மாண்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.