2015-10-01 16:05:00

புலம் பெயர்ந்தோர் நாளுக்கென திருத்தந்தை விடுத்துள்ள செய்தி


அக்.01,2015. பெற்றோருக்குரிய பாசம் கொண்டுள்ள கடவுள் காட்டும் அக்கறை,  அனைவருக்கும் உண்டு, குறிப்பாக, அவரது மந்தையில், காயப்பட்டு, நோயுற்று, களைப்புற்று இருக்கும் ஆடுகளுக்கு அதிகம் உண்டு என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் காணப்படுகின்றன.

2016ம் ஆண்டு, சனவரி 17ம் தேதி கடைப்பிடிக்கப்படவிருக்கும் குடிபெயர்ந்தோர் மற்றும் புலம் பெயர்ந்தோர் உலக நாளுக்கென திருத்தந்தை விடுத்துள்ள செய்தியை, குடிபெயர்ந்தோர் மற்றும் பயணிப்போர் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவை, அக்டோபர் 1, இவ்வியாழனன்று வெளியிட்டது.

சொந்த நாடுகளைவிட்டு அடுத்த நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்லும் மக்கள், செல்லும் நாடுகளில், பாரம்பரிய எண்ணங்கள், பழக்க வழக்கங்கள் கொண்டுள்ள தனி நபர்களுக்கும், சமுதாயத்திற்கும் சவாலாக அமைகின்றனர் என்று திருத்தந்தையின் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

போரும், மோதல்களும் நிறைந்த தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறும் இம்மக்கள், பயணத்தில் சந்திக்கும் கொடுமைகள், இழப்புக்கள் ஆகிய துன்பங்களுடன், சென்று சேரும் நாடுகளில் சந்தேகக் கண் கொண்டு அவர்கள் கருதப்படுவதால், மேலும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்று திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

இத்தகையதொரு நிலை உலகெங்கும் பரவியுள்ளதால், "குடிபெயர்ந்தோரும், புலம்பெயர்ந்தோரும் நமக்குச் சவால்கள்" என்ற கருத்தை, 2016ம்  ஆண்டு, குடிபெயர்ந்தோர் மற்றும் புலம் பெயர்ந்தோர் உலக நாளுக்குரிய மையக் கருத்தாக தான் தேர்ந்தெடுத்துள்ளதாக திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வறுமை, பட்டினி, ஏமாற்றப்படுதல், இயற்கை வளங்கள் தவறான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதல் என்ற கொடுமைகளிலிருந்து வெளியேறி, நல்லதொரு வாழ்வைத்  தேடிச் செல்லும் மக்கள், நம் சகோதர சகோதரிகள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று, திருத்தந்தையின் செய்தி வலியுறுத்துகிறது.

புலம்பெயர்ந்து சென்ற அனுபவத்தைப் பெற்றிருந்த அன்னை மரியா, புனித யோசேப்பு, என்ற இருவரின் பாதுகாப்பில் அனைவரையும் ஒப்படைப்பதாகவும், புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தன் ஆசீரை வழங்குவதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.