2015-10-01 16:47:00

'இறைவா, உமக்கே புகழ்' திருமடல், தகாலோக் மொழியில்


அக்.01,2015. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா, உமக்கே புகழ்' என்ற திருமடல், பிலிப்பின்ஸ் நாட்டின் தகாலோக் (Tagalog) மொழியில், அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற அகில உலகப் புத்தகக் கண்காட்சியில், கிளரிசியன் துறவுச் சபையின் தொடர்புத் துறையினர், இந்த மொழிபெயர்ப்புப் பதிப்பை வெளியிட்டனர்.

Atimonan நகரில் அமைந்துள்ள வானதூதரின் அரசி பங்குக் கோவிலில், 'இறைவா உமக்கே புகழ்' திருமடலின் தாக்கத்தால், சூரிய சக்தியால் உருவாக்கப்படும் மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.

திருத்தந்தையின் திருமடல், அறிவியல் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் தருவதைவிட, கத்தோலிக்கத் திருஅவை வழங்கியுள்ள சமுதாயப் படிப்பினைகளின் அடிப்படையில், இவ்வுலகைக் காக்கும் வழிகளை எடுத்துரைக்கிறது என்றும், மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளது, குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.