2015-10-01 16:42:00

அகில உலகக் கண்காட்சி, Expo 2015ல் கர்தினால் பரோலின்


அக்.01,2015. சமுதாயப் பிரச்சனைகளை, ஏட்டளவு சிந்தனைகளாக எண்ணிப் பார்க்காமல், அப்பிரச்சனைகளுக்குப் பின்புலத்தில் துன்புறும் மனிதரின் முகங்களைக் காணவேண்டும் என்பதை, மிலான் கண்காட்சியில் அமைந்துள்ள திருப்பீட அரங்கம் உணர்த்துகிறது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இத்தாலியின் மிலான் நகரில், கடந்த ஓராண்டளவாய் நடைபெற்றுவரும் அகில உலகக் கண்காட்சியான, Expo 2015ல் அமைந்துள்ள திருப்பீட அரங்கத்தை, செப்டம்பர் 30, இப்புதனன்று பார்வையிட்ட திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இவ்வாறு கூறினார்.

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்திற்கும் மனித முகங்கள் உள்ளன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐ.நா. பொது அவையில் உரையாற்றியபோது கூறியதை, இந்த அரங்கத்தில் தெளிவாகக் காணமுடிகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.

மனிதரின் மிக அடிப்படைத் தேவையான உணவை மையப்படுத்தி, மிலான் உலகக் கண்காட்சியில் திருப்பீடம் அமைத்துள்ள அரங்கம், தன் குறிக்கோளைப் பெருமளவு அடைந்துள்ளது என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.