2015-09-30 17:00:00

வெப்பநிலை நீதி, நிலையான வளர்ச்சிக்கு கத்தோலிக்கர் அழைப்பு


செப்.30,2015. பாரிசில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு, உலகின் வெப்பநிலையில் உண்மையான மாற்றத்தைக் கொணரும் என்ற தங்கள் நம்பிக்கையை வெளியிட்டுள்ளது கத்தோலிக்க அரசு-சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று.

கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மியான்மார் போன்ற நாடுகளில் பணியாற்றும் CIDSE என்ற 17 கத்தோலிக்க அரசு-சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுநலத் தலைவர்களும் அறிவாளர்களும் இணைந்து பாரிசில் கூடவிருக்கும் உலகத் தலைவர்களுக்கு விடுத்துள்ள விண்ணப்பத்தில் இவ்வாறு கேட்டுள்ளனர்.

பொருளாதார மற்றும் நிதி அமைப்பில் சீர்திருத்தம், வறுமை மற்றும் பசியை ஒழிப்பதற்கு முக்கிய நிபந்தனை, உற்பத்தி மற்றும் நிலையாய் இராத நுகர்வின் திட்டங்களை மாற்றுதல் போன்றவற்றுக்கு உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறு உலகத் தலைவர்களைக் கேட்டுள்ளன இக்கத்தோலிக்க நிறுவனங்கள்.

உலக வெப்பநிலை அதிகரிப்பு 1.6 செல்சியுஸ் டிகிரிக்குக் கீழே இருக்குமாறும், உலகின் பாதிச் செல்வத்தைக் கொண்டிருக்கும் சில செல்வந்தருக்கும், உலகின் மற்றவருக்கும் இடையே நிலவும் இடைவெளி குறைக்கப்படவும் தங்கள் அறிக்கையில் கேட்டுள்ளன அந்நிறுவனங்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே சமத்துவம், நூறு கோடி மக்களின், குறிப்பாக, உலகில் உணவு உற்பத்தியில் பெரும்பகுதியை வழங்கும் சிறு விவசாயிகளின்  உணவுக்கான உரிமை போன்றவற்றுக்கும் விண்ணப்பித்துள்ள அந்நிறுவனங்கள், வெப்பநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் வறியவர்கள் மற்றும் நலிந்தவர்கள் பாதுகாக்கப்படுமாறும் வலியுறுத்தியுள்ளன.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.