2015-09-30 16:15:00

திருத்தந்தையின் மறைக்கல்வி - அண்மை திருப்பயண அனுபவங்கள்


செப்.30,2015.  கியூபா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான தன் 10 நாள் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து இத்திங்கள் காலையில் வத்திக்கான் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வி உரையில், தன் பயண அனுபவங்கள் குறித்தே எடுத்துரைத்தார். புதன் மறைக்கல்வி உரைக்கு முன்னர், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில், ஏறத்தாழ  400 மாற்றுத் திறனாளிகளையும்,  மாற்றுத் திறனாளிகளோடு  சேவையாற்றும்  400 பணியாளர்களையும்  சந்தித்து, சிறிது நேரம்  உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். நோய், மற்றும், உடல் குறைபாடு என்பது துன்பம் தருவது எனினும், இறைவனிலான விசுவாசம், இவையனைத்தையும் மேற்கொள்ள உதவும் என அவர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை.  தனக்காக செபிக்குமாறும் அவர்களிடம் வேண்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அவர்களிடமிருந்து விடைபெற்று, தூய பேதுரு வளாகம் நோக்கி வந்தார். வழியில் குழுமியிருந்த மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறி, அவர்களின் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு, தூய பேதுரு பசிலிக்காப் பேராலயம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தன் அண்மை திருத்தூதுப் பயணம் குறித்து அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு எடுத்துரைத்தார். 

அன்பு சகோதர சகோதரிகளே, கியூபா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான என் அண்மை திருத்தூதுப் பயணம்,  குடும்பம் குறித்த எட்டாவது உலக மாநாட்டை மையம் கொண்டதாக அமைந்திருந்தது. என் கியூப திருத்தூதுப் பயணத்தின்போது, அனைத்து கியூப மக்களையும் எவ்வித பாகுபாடுமின்றி அணைத்துக் கொள்ளும் ஆவலைத் தாங்கியே சென்றேன். நம்மை உருமாற்றவல்ல, இறை இரக்கத்தின் வல்லமையை எடுத்துரைக்கவும், கியூப நாடு ஒரு நாள் தன்னை இவ்வுலகிற்கு திறக்கும், அதேவேளை, உலகும் கியூபாவை நோக்கி தன்னை திறக்கும் என்ற புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் வெளியிட்ட நம்பிக்கையை புதுப்பிக்கவும்  கியூபாவில் பயணம் மேற்கொண்டேன். புதிய பாலங்களைக் கட்டுதல், மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக நான் வாஷிங்டன் நகரில் பயணம் மேற்கொண்டேன். அங்கு நான் அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து உரை வழங்கியபோது, அந்நாட்டு வாழ்விற்கு அமெரிக்காவின் மத விடுதலை பாரம்பரியம் ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தேன். நியூ யார்க் நகரின் ஐ.நா. அலுவலகத்தில்  உரையாற்றியபோது,  அமைதி,  நீதி,  நியாயம்,  மனிதகுல ஒன்றிணைந்த வளர்ச்சி,  மற்றும்  இயற்கைப் பராமரிப்பு குறித்த அக்கறை போன்றவைகளை ஊக்குவிப்பதற்கான ஐ.நா.வின் பணியில் ஒத்துழைக்கும் திருஅவையின் அர்ப்பணத்தைப் புதுப்பித்தேன். என் இத்திருத்தூதுப் பயணம்,  ஃபிலடெல்ஃபியாவின் உலக குடும்ப மாநாட்டில் தன் உச்சத்தை எட்டியது. அங்கு,  குடும்பம் குறித்த இறைத்திட்டத்தின் அழகைக் கொண்டாடினோம். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே, பலன் நிறை உடன்படிக்கையாக இருக்கும் குடும்பமே, இவ்வுலகின் உண்மையான வளம் மற்றும் ஒப்புரவின் வருங்கால திறவுகோலாக உள்ளது.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி, தன் ஆசீரையும் வழங்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.