2015-09-30 16:30:00

கடுகு சிறுத்தாலும் – மன்னிப்புக் கேட்பதற்கு வயது தடையல்ல


அன்று ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன், மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அம்மனிதரும் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அன்று அந்த மனிதர் வீட்டுக்குச் சென்றார். இரவு உணவு முடித்துத் திரும்புகையில் அவருடைய மகன் கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி அவருக்குப் பின்னால் நின்றிருந்தான். அவர் திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார். வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’ என்று எத்தனை முறை சொல்வது என்ற வார்த்தைகள் அவரிடமிருந்து அனலடித்தன. முகம் வாடிப்போய் விலகிய சிறுவனின் கண்களில் நீர் தாரை தாரையாக வடிந்தது. அதேநேரம், தூங்கச் சென்ற அத்தந்தைக்கு உறக்கம் வரவில்லை. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு, சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று வருந்தினார். நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றார். உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான். அவனருகில் மண்டியிட்ட தந்தை, என்னை மன்னித்துவிடு, நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது, என்றார். சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான். வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த மலர்க்கொத்தை தந்தையின் கையில் வைத்தான். இதென்ன?’ தந்தை வியந்தார். இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்த மலர்களைப் பார்த்தேன். பல நிறங்களில் இருந்த மலர்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறையச் சேகரித்தேன். அதை உங்களிடம் இரகசியமாகக் கொடுப்பதற்காகத்தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன் என்று சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.

குடும்பம் என்பது கடவுள் நமக்காக இப்பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம். அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம் செயல்களில்தான் இருக்கிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.