2015-09-30 16:39:00

அமைதி ஆர்வலர்கள் – 1996ல் நொபெல் அமைதி விருது - பாகம் 1


செப்.30,2015. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள கிழக்குத் திமோர், போர்த்துக்கீசியரின் காலனியாக 1702ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, 1942ம் ஆண்டு பிப்ரவரியில் ஜப்பான் பேரரசு கிழக்குத் திமோரை ஆக்ரமித்தது. இதில் எழுபதாயிரம் பேர்வரை இறந்தனர். ஆயினும், அப்போரில் ஜப்பான் சரணனடைந்ததால் மீண்டும் கிழக்குத் திமோர் போர்த்துக்கீசியரின் காலனியாக மாறியது. 1974ம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டின் புதிய அரசு, கிழக்குத் திமோரில் காலனி ஆட்சியை முடித்துக் கொள்ள தீர்மானித்து, 1975ம் ஆண்டில் போர்த்துக்கல் காலனி ஆட்சியை முடித்துக்கொண்டது. ஆனால் அவ்வாண்டின் இறுதியில் இந்தோனேசியா அதனைத் தன்னோடு இணைத்துக் கொண்டது. ஆனால், கிழக்குத் திமோரின் சுதந்திரத்திற்காகப் போராடிய Fretilin எனப்படும் மார்க்சீயப் புரட்சிக் குழு, முழு விடுதலைக்கு அழைப்பு விடுத்தது. அதேநேரம், UDT என்ற திமோர் சனநாயகக் கழகம், போர்த்துக்கல் நாட்டுடன் தொடர்ந்து கூட்டமைப்பு வைத்துக்கொள்ள விரும்பியது. பின்னர், UDT கழகம் தனது கொள்கையை மாற்றிய பின்னர் இவ்விரண்டு கட்சிகளும் சேர்ந்து கிழக்குத் திமோரின் சுதந்திரத்திற்காகப் போராடின. இந்தோனேசியாவின் ஆக்ரமிப்பை எதிர்த்து 24 ஆண்டுகள் இடம்பெற்ற இப்போராட்டங்களில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர். பின்னர் 2002ம் ஆண்டு மே 20ம் தேதி கிழக்குத் திமோர் சுதந்திர குடியரசு நாடானது. இந்நாடு தற்போது Timor-Leste சனநாயக குடியரசு என அழைக்கப்படுகிறது. இந்த 24 ஆண்டுச் சண்டையில், நீதியும் அமைதியும் நிறைந்த தீர்வைக் காண்பதற்கு கிழக்குத் திமோரின் José Ramos-Horta, கத்தோலிக்க ஆயர் Carlos Felipe Ximenes Belo ஆகிய இருவரும் ஆற்றிய பணிகளுக்காக, இவ்விருவருக்கும் 1996ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.

1948ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி கிழக்குத் திமோரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த Carlos Felipe Ximenes Belo அவர்கள், இளவயதில் அருள்பணியாளராக வேண்டும் என்ற ஆவலில் சலேசிய துறவு சபையில் சேர்ந்தார். 1973ம் ஆண்டில் இறையியல் படிப்புக்காக போர்த்துக்கல் சென்றார். உரோமையிலும் படித்த இவர், 1980ம் ஆண்டில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1981ம் ஆண்டு ஜூலையில் கிழக்குத் திமோர் திரும்பினார். இருபது மாதங்கள் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1989ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அச்சமயத்தில் இவர் அமைதியானவராகத் தெரிந்ததால் இவரது ஆயர் நியமனத்தை இந்தோனேசியத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதேசமயம், கிழக்குத் திமோர் அருள்பணியாளர்கள் இவரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயர் திருப்பொழிவு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. எனினும், இவர் ஆயரான ஐந்து மாதங்களுக்குள், தலைநகர் திலி பேராலயத்தில் ஆற்றிய மறையுரையில், Kraras(1983) படுகொலையில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் இந்தோனேசிய அதிகாரிகள் நடத்திய கைது நடவடிக்கைகளுக்கு எதிராக மிகக் கடுமையாகப் பேசினார். வெளி உலகோடு தொடர்பு கொள்வதற்கு திருஅவையால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த ஆயர் பெலோ அவர்கள், கிழக்குத் திமோரின் நிலைமை குறித்து வெளி உலகுக்குக் கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். இந்தோனேசியாவை எதிர்ப்பவர்களால் தனிமைப்படுத்தப்பட்டது மற்றும் உலகின் பெரும்பகுதியின் ஆர்வமற்ற போக்கிற்கு மத்தியில் ஆயர் பெலோ வெளிநாடுகளோடு தொடர்புகளை உருவாக்கினார்.

கிழக்குத் திமோரின் எதிர்காலம் குறித்து ஐ.நா. பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் மற்றும், ஒரு நாடாகவும், நாட்டின் மக்களாகவும் இறந்துகொண்டிருக்கும் கிழக்குத் திமோருக்கு அனைத்துலக சமுதாயம் உதவ வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 1989ம் ஆண்டு பிப்ரவரியில் போர்த்துக்கல் அரசுத் தலைவர், திருத்தந்தை, ஐ.நா. பொதுச்செயலர் ஆகியோருக்குக் கடிதம் எழுதினார் ஆயர் பெலோ. இக்கடிதம் அவ்வாண்டு ஏப்ரலில் பொதுவில் உலகுக்குத் தெரிய ஆரம்பித்ததிலிருந்து, இந்தோனேசிய அரசின் இலக்குக்கு உள்ளானார் ஆயர் பெலோ. பல்வேறு தருணங்களில் நடந்துகொண்டதுபோல, 1991ம் ஆண்டின் சாந்தா குரூஸ் படுகொலைக்குத் தப்பிய இளையோர்க்கு, தனது இல்லத்தில் அடைக்கலம் அளித்தது மற்றும் இதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்தபோது இவருக்கு எதிரான இந்தோனேசிய அரசின் நடவடிக்கைகள் அதிகரித்தன. José Ramos-Horta அவர்களுடன் சேர்ந்து ஆயர் பெலோ அவர்களுக்கு 1996ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது அறிவிக்கப்பட்டபோது, இவர் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபராக மாறினார். கானடா மனித உரிமைகள் மற்றும் சனநாயக அமைப்பிடமிருந்து 1995ம் ஆண்டில் John Humphrey Freedom விருது பெற்றார்.

2002ம் ஆண்டு மே 20ம் தேதி கிழக்குத் திமோர் சுதந்திரம் அடைந்த பின்னர் தனது அரசியல் வாழ்வு மற்றும் ஆயர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆயர் பெலோ அவர்கள், ஆப்ரிக்காவின் மொசாம்பிக் நாட்டில் மறைப்பணியாளராக, தனது சலேசிய சபையினரோடு வாழ்ந்து வருகிறார். துணிச்சல்மிக்க அமைதி ஆயர் என அழைக்கப்படும் இவர் 1996ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நொபெல் விருதைப் பெற்று ஆற்றிய உரையில், "இரத்தம் சிந்தல், அடக்குமுறை, வன்முறை மற்றும் போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு அமர்ந்து ஒருவரையொருவர் புரிந்துகொள்வோம், ஏனெனில் கிழக்குத் திமோர் மக்களின் நீண்டகாலத் துன்பங்கள் மேலும் வளர்ந்துகொண்டிருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாது" என்று சொன்னார்.

உலகின், குறிப்பாக, கிழக்குத் திமோர் இளையோருக்கு நான் சொல்வது – இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் சொன்னது போல, "தாமரை மலர் போன்ற இளமை, வாழ்வில் ஒருமுறை மட்டுமே மலரும், அதை வழியில் உதிர்ந்துவிடச் செய்யாதீர்கள். இந்த உலகில் அமைதியான உடன்பிறப்பு உணர்வில் வாழ்வதற்கு ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்கு நல்ல காரியங்களைச் செய்வதற்கு கடமைப்பட்டுள்ளது. அமைதி, நல்லிணக்கம், உடன்பிறப்பு உணர்வு ஆட்சி செய்யும் ஒரு சமுதாயத்துக்குள் செல்வதற்குரிய வருங்கால உலகை மாற்றுவது, இளையோரே, உங்கள் தோள்களில் உள்ளது என்று கூறியவர் ஆயர் கார்லோஸ் பெலோ. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.