2015-09-29 11:48:00

விவிலியத் தேடல் : இறுதித் தீர்ப்பு உவமை – பகுதி - 6


உரோம் நகரில், சாந்தோ ஸ்பிரித்தோ (Santo Spirito) என்ற பெயருடன், பழம்பெரும் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. தூய ஆவியாரின் பெயரைத் தாங்கிய இந்த மருத்துவமனையின் வாசலுக்கருகே பொருள் பொதிந்த ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது. தலையில் முக்காடிட்டு, அங்குள்ள நடைபாதையில் அமர்ந்து, ஒருவர் தர்மம் கேட்பதுபோல் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தர்மம் கேட்பவரின் முகம் தெரியாதவாறு, முக்காடு மூடியுள்ளது. அமர்ந்திருப்பவரின் வலது கரம், தர்மம் கேட்கும் பாணியில் நீட்டப்பட்டுள்ளது. அந்தக் கரத்தில் ஆணியால் உருவான துளை தெரிகிறது. அதுவே, அங்கு அமர்ந்திருப்பவர் இயேசு என்பதை, அடையாளம் காட்டுகிறது.

‘தர்மம் கேட்கும் இயேசு’வின் முகத்தைக் காண விழைவோர், அந்த உருவத்திற்கு அருகே சென்று, குனிந்து பார்த்தால் மட்டுமே முகத்தைக் காணமுடியும். நான் அவ்விதம் ஒருமுறை குனிந்து பார்க்க முயன்றபோது, தலையை மூடி, தரையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கும் இயேசு என்னிடம், "தர்மம் கேட்டு வரும் எத்தனை பேருக்கு அருகில் நீ தலை குனிந்திருக்கிறாய்? எத்தனைபேர் முகத்தை நீ பார்த்திருக்கிறாய்?" என்று கேட்பதைப்போல் உணர்ந்தேன். பதில் சொல்ல முடியாமல் தடுமாறினேன்.

கனடா நாட்டைச் சேர்ந்த Timothy Schmalz என்ற சிற்பக் கலைஞர் உருவாக்கிய இந்த சிற்பத்திற்கு, அவர் அளித்த தலைப்பு, "நீங்கள் செய்ததையெல்லாம்..." (Whatsoever you do...). நாம் கடந்த சில வாரங்களாகச் சிந்தித்து வரும் 'இறுதித் தீர்ப்பு உவமை'யில் நம்மைச் சந்திக்க வரும் அரசர், "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொல்லும் தீர்ப்பிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள், 'தர்மம் கேட்கும் இயேசு'வின் உருவத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேவையில் இருக்கும் அயலவருக்கு என்ன செய்தீர்கள் அல்லது செய்யாமல் போனீர்கள் என்று, இறுதித் தீர்ப்பு நேரத்தில், அரசர் கேட்கும் கேள்விகளை கருவாகக் கொண்டு, சிற்பக் கலைஞர் Timothy Schmalz அவர்கள், இன்னும் இரு சிலைகளை வடித்துள்ளார். ஒன்று, 'வீடற்ற இயேசு' மற்றொன்று 'சிறையில் இருக்கும் இயேசு'. 'வீடற்ற இயேசு' உருவம், தெருவோரம் இருக்கும் ஒரு 'பெஞ்ச்'சில் முகமெல்லாம் மூடி படுத்திருக்கும் ஒரு மனிதரின் கால்கள் மட்டும் வெளியே தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கால்களில் ஆணிகளால் உருவான துளைகள் இருக்கும். அதேபோல், 'சிறையில் இருக்கும் இயேசு' உருவத்தில், சிறைக் கம்பிகளைப் பிடித்தபடி ஒரு கரமும், கம்பிகள் வழியே வெளியே நீண்டிருக்கும் மற்றொரு கரமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் ஆணிகளால் துளையுண்ட கரங்களாகக் காணப்படுகின்றன.

முகம் தெரியாதவண்ணம் இவ்வுருவங்களை தான் வடித்ததற்கு Timothy அவர்கள் சொல்லும் காரணம், நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அவ்வுருவங்களுடன் தன்னையே ஐக்கியமாக்கியிருக்கும் இயேசுவுக்கு, தனியொரு முகம் தேவையில்லை. தேவைகளுடன் உலகில் துன்புறும் அனைவரின் முகத்தையும் அவர் தாங்கியிருக்கிறார் என்று சிற்பி Timothy கூறினார். பசித்திருப்போர், தாகமாயிருப்போர், ஆடையின்றி இருப்போர், சிறையிலிருப்போர் ஆகியோருடன் இயேசு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டார் என்ற அதிர்ச்சி தரும் உண்மை, 'இறுதித் தீர்ப்பு உவமை'யில் நம்மை விழித்தெழச் செய்கிறது.

'வீடற்ற இயேசு'வின் உருவத்தை, Timothy அவர்கள், 2013ம் ஆண்டு, நவம்பர் மாதம் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்திற்கு கொண்டு வந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வுருவத்தை ஆசீர்வதித்தபின், ஒரு சில நிமிடங்கள், அவ்வுருவத்தைத் தொட்டவண்ணம், கண்களை மூடி செபித்தார். "இயேசுவை இவ்வுருவில் காண்பது, சக்திவாய்ந்த ஒரு கருத்தைச் சொல்கிறது" என்று திருத்தந்தை தன்னிடம் சொன்னதாக, Timothy பேட்டியளித்துள்ளார்.

செப்டம்பர் 24ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைநகர் வாஷிங்டனில் காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் அனைவரையும் சந்தித்து உரையாற்றினார். இதுவரை, நான்கு திருத்தந்தையர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு பயணங்கள் மேற்கொண்டிருந்தாலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மட்டுமே, காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கு உரை வழங்கும் அழைப்பு பெற்றார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு, காங்கிரஸ் அவை உறுப்பினர்களுடன் உணவு அருந்தவும் அவருக்கு ஏற்கனவே அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காங்கிரஸ் அவை உறுப்பினர்களுடன் உணவருந்தும் அழைப்பை ஏற்கவில்லை. அதற்கு மாறாக, அவர், ‘கத்தோலிக்கப் பிறரன்புப் பணிகள்’ அமைப்பு, அந்நகரில், வீடற்றவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த மதிய உணவை ஆசீர்வதிக்கச் சென்றார். வீடற்று, பசியாய் இருந்த மக்களில் இயேசுவை மீண்டும் சந்திக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்றிருந்தார். அவர் வத்திக்கான் சதுக்கத்தில் ஆசீர்வதித்த 'வீடற்ற இயேசு'வின் உருவத்தைப் போலவே, மற்றொரு உருவம், வாஷிங்டன் நகரில் இயங்கிவரும் 'கத்தோலிக்கப் பிறரன்புப் பணிகள்" மையத்திற்கு முன் நிறுவப்பட்டுள்ளது.

'வீடற்ற இயேசு'வின் உருவம், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும், கனடாவிலும் பல்வேறு கோவில் வளாகங்களிலும், நிறுவனங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. 'வீடற்ற இயேசு', ஒரு வார்த்தையும் பேசாமல், நாள் முழுவதும் மறையுரை வழங்கி வருகிறார் என்று, இவ்விருவத்தைக் கண்ட பலர் கூறியுள்ளனர்.

இயேசுவை வீடற்றவராக காணும்போது, தங்களுக்குச் சங்கடமாக உள்ளதென்று வேறு சிலர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளனர். நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்தும் இந்த உண்மைக்கு இவ்வுலகில் நாம் தகுந்த விடையளிக்கத் தவறினால், அடுத்த உலகில் நிரந்தர சங்கடத்தில் சிக்கிக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

தேவையில் இருப்போர் சார்பில் என்னென்ன செய்தோம், அல்லது, செய்ய மறுத்தோம் என்பதே, நம்மை 'ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக' அல்லது, 'சபிக்கப்பட்டவர்களாக' மாற்றும் என்பதை, தெளிவாக, உறுதியாக இயேசு கூறியுள்ளார்.

"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று நேர்மையாளர்களைப் பார்த்தும், "மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 25:40,45) என்று, சபிக்கப்பட்டவர்களைப் பார்த்தும், தீர்ப்பிடும் அரசர் சொல்கிறார்.

அரசர் சொல்லும் இந்தக் கூற்றைக் கேட்கும்போது, 'ஒருவருக்கு' என்ற சொல், என் கவனத்தை அதிகம் ஈர்த்தது. இவர்களில் ஒருவருக்கு நாம் உதவி செய்தாலும், அது விண்ணக வாயிலைத் திறந்துவிடும் என்று அரசர் கூறுகிறார்.

பல வேளைகளில், வறியோருக்கு உதவி செய்யாமல் விலகிச் செல்வதற்கு பலர் கூறும் காரணம்... "ஓ! இந்த ஒருவருக்கு உதவி செய்வதால், என்ன நடந்துவிடப் போகிறது? உலகெங்கும் கோடான கோடி பேர் வறுமையில் இருப்பது ஒரு கொடுமை. இவர் ஒருவருக்கு உதவி செய்வதால், வறுமையை உலகிலிருந்து போக்கிவிட முடியுமா?" என்ற கேள்விகள், நம் முன் நிற்கும் இந்த ஒருவருக்கு உதவி செய்வதையும் தடுக்கிறது.

இறுதித் தீர்ப்பு நேரத்தில் தோன்றும் அரசர், "உலகின் வறுமையை ஒழிக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பப் போவதில்லை. "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்பதே அவர் வலியுறுத்தும் அளவுகோல். ஒருவரின் துயரைத் துடைப்பதா, அல்லது, உலகினர் அனைவரின் துயரைத் துடைப்பதா என்ற கேள்வி எழும்போது, கடற்கரையில் நடந்த ஒரு நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது.

உலகின் துன்பங்களை, அநீதிகளை எவ்விதம் நீக்குவது என்ற ஆழ்ந்த சிந்தனையுடன் ஒருவர் கடற்கரையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன் ஒரு சிறுவன், கடற்கரையில் ஒதுங்கியிருந்த 'நட்சத்திர மீன்களை' (star fish) ஒவ்வொன்றாக எடுத்து கடலில் எறிந்துகொண்டிருந்தான். நம் சிந்தனையாளர், அச்சிறுவனை அணுகி, "என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு, அச்சிறுவன், "இந்த மீன்கள் கரையிலேயே கிடந்தால், இறந்துவிடும். எனவே, இவற்றை நான் மீண்டும் கடலுக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னான். அதற்கு பெரியவர், "இந்தக் கடற்கரையில் பல்லாயிரம் மீன்கள் ஒதுங்கியிருக்கின்றன. அதேபோல், உலகெங்கும் உள்ள கடற்கரைகளில் பல கோடி மீன்கள் ஒதுங்கியிருக்கக் கூடும். அவற்றையெல்லாம் உன்னால் காப்பாற்ற முடியுமா?" என்று கேட்டார்.

அச்சிறுவன் அவரை ஒருமுறை ஆழமாகப் பார்த்துவிட்டு, பின்னர். "உலகின் கடற்கரைகளில் ஒதுங்கியிருக்கும் அனைத்து மீன்களையும் என்னால் காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இதோ, இந்த ஒரு மீனை என்னால் காப்பாற்ற முடியுமே!" என்று சொல்லியபடி, குனிந்து ஒரு நட்சத்திர மீனைக் கையில் எடுத்து, கடலுக்குள் எறிந்தான் சிறுவன்.

தனி மனிதர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும், தனி மனிதர்களுக்குச் செய்யும் உதவிகள் பயனற்றவை என்றும் எண்ணுவதால்தான், ஒவ்வொருவரும் செய்யக்கூடிய நன்மைகளும் தடைபட்டுப் போகின்றன. தலைசிறந்த பெண்மணி, ஹெலன் கெல்லர் (Helen Keller) அவர்கள் சொன்ன ஒரு கூற்று நமக்குச் சவாலாக அமைகிறது: I am only one, but I am still one. I cannot do everything, but still I can do something. And because I cannot do everything I will not refuse to do the something that I can do.

"நான் தனி ஒருவர்தான். என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியாது. ஆனால், என்னால் சிலவற்றைக் செய்யமுடியும். என்னால் எல்லாவற்றையும் செய்யமுடியாது என்ற காரணத்தால், நான் செய்யக்கூடிய சிலவற்றை செய்வதற்கு மறுக்கமாட்டேன்."

தன்னலத்தின் எதிரொலியாக உருவாகும் தயக்கத்தினால் ஒருவருக்குக் கூட உதவி செய்யாமல் நாம் இவ்வுலகிலிருந்து விடைபெற்றால், மறு உலகில் நம்மைச் சந்திக்கும் அரசர் சொல்லும் கடினமான வார்த்தைகள் உள்ளத்தில் இடியாக வந்திறங்கும். இந்த உவமையின் முதல் பகுதியில், நேர்மையாளர்களை விண்ணகத்திற்கு வரவேற்க அரசர் பயன்படுத்தும் வார்த்தைகளையும், உவமையின் பிற்பகுதியில், தன் இடப்பக்கம் இருப்பவர்களைப் பார்த்து, சபித்துச் சொல்லும் வார்த்தைகளையும் இணைத்துச் சிந்திக்கும்போது, சில தெளிவுகள் கிடைக்கின்றன:

மத்தேயு 25: 34, 41

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, "சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்" என்பார்.

விண்ணரசு, உலகம் தோன்றியதுமுதல் நமக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும், அணையாத நெருப்பு, நமக்காக உருவாக்கப்பட்டதல்ல, அது, அலகைக்கும், அதன் தூதருக்கும் உருவாக்கப்பட்டது என்பதையும், இயேசு, இவ்வுவமை வழியே தெளிவுபடுத்துகிறார்.

மனிதராய் பிறந்த நாம் அனைவருமே, விண்ணரசில் நுழையும் உரிமை பெற்றவர்கள். அந்த உரிமையை இழக்கும் சக்தி நமக்கு உண்டு. அடுத்தவரைப் பற்றிய கவலை சிறிதும் இன்றி, தன்னலச் சிறைகளில் நாம் அடைபட்டுக் கிடந்தால், நாமாகவே வலியச் சென்று, அலகைக்கென உருவாக்கப்பட்டுள்ள சிறைக்குள் சிக்கிக் கொள்கிறோம்.

தேவையில் இருக்கும் ஒருவருக்காவது நன்மைகள் செய்து, அவரிடமிருந்து நற்சான்றிதழ் பெற்று, விண்ணரசில் நுழையும் தகுதி பெற, இன்றே முயல்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.