2015-09-29 16:00:00

ஓட்டளிக்கும் புனிதக் கடமையை மக்கள் நிறைவேற்ற வேண்டும்


செப்.29,2015. சனநாயகக் கலாச்சாரம், மனித உரிமைகள் மற்றும் ஒப்புரவை ஊக்குவிக்கும் வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் ஓட்டளிக்குமாறு யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ(Charles Maung Bo) அவர்கள் மியான்மார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மியான்மார் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில், முதன்முறையாக வருகின்ற நவம்பரில் சுதந்திர மற்றும் பலகட்சிகள் போட்டியிடும் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் போ.

வருகின்ற நவம்பர் 8ம் தேதியன்று நடைபெறும் பொதுத் தேர்தலுக்குரிய பிரச்சாரங்களைத் தொடங்குவதற்கு மியான்மார் அரசு அதிகாரப்பூர்வமாக இம்மாதத்தில் (செப்.08) அங்கீகாரம் அளித்துள்ளதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், வருகின்ற தேர்தல் சனநாயகத்தை உண்மையாகவே செயல்படுத்துவதாக அமைய வேண்டுமென்று கூறியுள்ளார்.

ஒரு சனநாயகத்தில் ஓட்டளிப்பது அடிப்படை உரிமை என்றும், வருகின்ற தேர்தலில் இந்தப் புனிதக் கடமையை மக்கள் தயவுகூர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், மக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்குமாறும் கூறியுள்ளார் 67 வயது நிரம்பிய கர்தினால் போ

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.