2015-09-29 15:33:00

இளையோர் இறைஇரக்கத்தின் கருவிகளாக மாற திருத்தந்தை அழைப்பு


செப்.29,2015. தமது அன்பினால் அனைத்தையும் வழங்கியிருக்கும் இறைவனுக்கு இளையோர் மிகவும் விலைமதிப்பற்றவர்கள் என்றும், அவர் இரக்கமுள்ளவர் என்பதால் இயேசுவைப் பார்ப்பதற்கு இளையோர் அஞ்ச வேண்டாமென்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் 31வது உலக கத்தோலிக்க இளையோர் தினத்திற்கென இத்திங்களன்று வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் ஜூபிலி ஆண்டுச் சூழலில் இந்த உலக தினம் இடம்பெறுவதைக் குறிப்பிட்டு, இக்காரணத்திற்காக என்னவோ இந்த இளையோர் தினம், நம் காலத்தின் இரக்கத்தின் இரு பெரும் திருத்தூதர்களாகிய புனித திருத்தந்தை 2ம் யோவான் பவுல், புனித ஃபவ்ஸ்தீனா கோவால்ஸ்கா ஆகிய இருவருடன் தொடர்புடைய கிராக்கோவ் நகரில் இடம் பெறுகிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

தனது தனிப்பட்ட வாழ்வில் இறைவனின் இரக்கத்தை அனுபவித்ததை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் 17 வயது இளைஞராக இருந்தபோது அருள்பணியாளர் வாழ்வுக்கு இறைவன் விடுத்த அழைப்பைத் தான் முதலில் கேட்ட நிகழ்வைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

உலகின் இளையோர் அனைவரும் தங்களைச் சுற்றி வாழ்வோரிடம் இரக்கத்தின் கருவிகளாக மாறுமாறும், கிராக்கோவ் நிகழ்வு நடக்கவிருக்கும் வருகின்ற ஏழு மாதங்களில், ஒவ்வொரு மாதமும் பல்வேறு ஆன்மீக மற்றும் உடல் அளவிலான இரக்கத்தின் பணிகளில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.      

இறைவனின் இரக்கம் மிகவும் உண்மையானது, அதை நாம் நேரடியாக அனுபவிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ள திருத்தந்தை, இளையோரே, உங்களின் அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பதற்குத் தயாராகவுள்ள இயேசுவின் இரக்கப் பார்வைக்கு உங்களைக் கையளியுங்கள், இயேசு உங்களுக்காகக் காத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

“இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” என்ற தலைப்பில், 31வது உலக கத்தோலிக்க இளையோர் தினம், 2016ம் ஆண்டு ஜூலை 25 முதல் 31 வரை கிராக்கோவில் நடைபெற உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.