2015-09-28 12:31:00

குடும்பங்கள் உலக மாநாடு திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை


செப்.28,2015. அன்பு சகோதர, சகோதரிகளே, இன்று நாம் வாசித்த இறைவார்த்தை, வெகு வலுவான உருவங்களை மனதில் பதித்து, நமக்குச் சவாலாக அமைகின்றது; அதேவேளையில், நம்மை உற்சாகப்படுத்துகின்றது.

முதல் வாசகத்தில், இறைவாக்குரைக்கும் இருவரைத் தடைசெய்யுமாறு, யோசுவா, மோசேயிடம் கூறுகிறார். நற்செய்தியில், இயேசுவின் பெயரால் பேய் ஒட்டிய ஒருவரை, தாங்கள் தடுத்ததாக, யோவான், இயேசுவிடம் கூறுகிறார். மோசேயும், இயேசுவும் இவ்வாறு செய்தவர்களைக் கடிந்துகொண்டனர். எல்லாருமே இறைவாக்குரைத்தால், எல்லாருமே புதுமைகள் செய்தால் நன்றாக இருக்குமே!

இயேசு சொன்னதும், செய்ததும் பலரிடமிருந்து எதிர்ப்பை உருவாக்கியது. இறைவனால் தேர்ந்துகொள்ளப்படாத மனிதர்களின் விசுவாசத்தை அவர் ஏற்றுக்கொண்டதால் இந்த எதிர்ப்பு எழுந்தது. மனிதர்கள் உருவாக்கியுள்ள வரைமுறைகளைத் தாண்டி, இறைவன் சுதந்திரமாகச் செயல்படக் கூடியவர் என்பது, ஒருவருக்கு இடறலாக இருந்தால், அந்த சோதனையைக் கடுமையாக நிராகரிக்கவேண்டும்.

இதை நாம் புரிந்துகொண்டால், இயேசு, இடறல் குறித்து கடுமையாகப் பேசுவதைப் புரிந்துகொள்ளலாம். ஆவியாரின் செயல்பாடுகளை நம்புவதற்குத் தடையாக இருக்கும் அனைத்தும், இயேசுவைப் பொருத்தமட்டில் இடறல்களாக உள்ளன.

தந்தையாம் இறைவனின் தாராள மனதை யாரும் விஞ்சமுடியாது. அவர் எங்கும் விதை விதைப்பவர். அவர் நம்மைத் தேடிவருபவர், நமக்காகக் காத்திருப்பவர் என்ற உறுதியை அவர் அன்பு நமக்குத் தருகிறது.

"நல்லது எதையும் தடுக்காதீர்கள்! அவை வளர்வதற்கு உதவி செய்யுங்கள்!" என்று இயேசு கூறுகிறார். நம்மோடு சேராதவர் மத்தியில் தூய ஆவியாரின் செயல்பாடுகள் இருக்கும் என்பதை நம்பாமல் இருப்பது ஆபத்தான சோதனை. அது நம் நம்பிக்கையைச் சிதைத்துவிடும்.

தூய ஆவியாரின் பிரசன்னத்தையும், செயல்பாட்டையும் உணர்வதற்கு, நம்பிக்கை ஒரு வழியாக அமைகிறது. புனிதம் என்பது சிறு செயல்களில் அடங்கியுள்ளது என்பதை இந்த நம்பிக்கை சொல்லித் தருகிறது. “நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மாற்கு 9:41) என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். இத்தகைய சிறு செயல்களை நாம் குடும்பங்களில் கற்றுக்கொள்கிறோம். அன்னையர், பாட்டிகள், தந்தையர், தாத்தாக்கள் ஆகியோரால், நம் குடும்பங்களில் அமைதியாக பல சிறு சிறு செயல்கள் நடைபெறுகின்றன.

இவற்றின் வழியே அன்பு வெளிப்படுகிறது. இந்த அன்பினால் நம் நம்பிக்கை உருபெறுகிறது. எனவேதான் நமது குடும்பங்களை திருஅவைகள் என்று கூறுகிறோம். இத்தகைய சிறு அற்புதங்களைத் தடுக்கவேண்டாம் என்று இயேசு கூறுகிறார்.

நம் இல்லங்களைப் போலவே, இந்த உலகம் என்ற இல்லத்திற்கு நாம் என்ன செய்யமுடியும்? எவ்வகையான உலகத்தை நம் குழந்தைகளுக்கு விட்டுச்செல்ல விழைகிறோம்? இந்தக் கேள்விக்கு நாம் தனி மனிதர்களாகப் பதில் சொல்ல முடியாது. இவ்வுலகம் என்ற இல்லத்தைக் காப்பதற்கு, அனைவரும் இணைந்துவரவேண்டும். நாம் உருவாக்கும் ஒற்றுமையும், கூட்டுறவும், நம் குழந்தைகளுக்கு உந்துதலாக அமையட்டும்.

உலகின் குடும்பங்கள் நமக்கு உதவி செய்யும்படி கிறிஸ்தவர்களாகிய நாம் கேட்கிறோம். இந்தக் கொண்டாட்டத்தில் எத்தனைபேர் இங்குள்ளோம்? இதுவே ஒருவகை புதுமையல்லவா! நாம் அனைவரும் இறைவாக்குரைப்பவர்களாக, புதுமை செய்பவர்களாக இருந்தால் எவ்வளவு மேன்மையாக இருக்கும்!

இறைவாக்குரைப்பதும், புதுமை செய்வதும், நமது எல்லைகளைத் தாண்டி, எங்கும் இருப்பது, எவ்வளவு அழகு! இத்தகைய திறந்த மனதிற்காக இறைவார்த்தை வழியே, நம் நம்பிக்கையைப் புதுப்பிப்போம்.

தூய ஆவியார் இன்னும் உயிராற்றலுடன் செயலாற்றுகிறார் என்பதைக் கூறும் ஒவ்வொருவரும், அவர் எந்த நாட்டை, மதத்தை, இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், நம் பாராட்டையும், நன்றியையும் பெறுவார்.

இத்தகைய திறந்த, தூய்மையான மனதை இறைவன் நம்மனைவருக்கும் அருளும்படி மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.