2015-09-28 15:52:00

இளையோர் குடும்பம் அமைக்க ஆயர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்


செப்.28,2015. உலக குடும்பங்கள் மாநாட்டுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயர்களுக்கென தயாரித்து வைத்திருந்த உரையையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். மேய்ப்புப்பணி சார்ந்த சிந்தனைகளையும், உலக குடும்பங்கள் மாநாட்டின் மகிழ்வையும்  ஆயர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். அமெரிக்க காங்கிரஸ் அவையில் உரையாற்றியபோது, இளையோர், குடும்பங்கள் அமைப்பதிலிருந்து அவர்களை விலக்கும் கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், குடும்பம் நடத்த சிலரிடம் பொருள் இல்லை. மற்றவர்கள், இதைவிடச் சிறந்த வழி இருக்கின்றது என திருமண வாழ்வைத் தேர்ந்து கொள்வதில்லை என்று கூறினேன். சமுதாயத்தில் பரவலாக நிலவும் நுகர்வுத் தன்மையும், போலியான விளக்கங்களைப் பின்பற்றும் ஆர்வமும், இளையோர் திருமண வாழ்வுக்குத் தங்களை அர்ப்பணிப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இம்மாதிரியான போக்குக்கு எதிராகத் துணிச்சலுடன் செல்வதற்கு மேய்ப்பர்களாகிய நாம் இளையோரை ஊக்கப்படுத்த வேண்டும். திருஅவைக்கும், இறைவனின் படைப்புக்கும் இடையே நிலவும் உடன்பாட்டின் அடிப்படை இடமாக குடும்பம் அமைந்துள்ளது. குடும்பமின்றி திருஅவைகூட இருக்க முடியாது மற்றும் திருஅவை எவ்வாறு இருக்க வேண்டுமென அழைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறும் இருக்க இயலாது. இக்காலத்தின் சமூக, கலாச்சார மற்றும் நீதி அமைப்பு மாற்றங்களுக்கு கிறிஸ்தவர்களும் உட்படுகின்றனர். இதை நாம் புறக்கணிக்க முடியாது. குடும்பமே உலகிற்கு நம் கதவு. குடும்பமே, அனைத்துச் சிறாருக்கும் பொழியப்பட்டுள்ள இறைவனின் மாற்ற இயலாத சான்று. திருஅவைக்கும், குடும்பங்களுக்கும் இடையே உள்ள உறவு உறுதிப்படுத்தப்பட வேண்டும். நம் தவறுகளால் இந்தப் பிணைப்பு வலுப்படுத்தப்படவில்லையென்றால், குடும்பங்கள் இறைவனின் மகிழ்வான நற்செய்தியிலிருந்து பழுதுபார்க்க முடியாத அளவுக்கு விலகிச் சென்றுவிடும் என்று ஆயர்களை எச்சரித்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.