2015-09-28 16:35:00

2018ல் டப்ளினில் 9வது உலக குடும்பங்கள் மாநாடு


செப்.28,2015. இஞ்ஞாயிறு காலையில், புனித சார்லஸ் பொரோமேயோ குருத்துவக் கல்லூரியில் ஆர்ஜென்டினா நாட்டுக் குடும்பம் ஒன்றையும் சந்தித்தார் திருத்தந்தை. உலக குடும்பங்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, Catire மற்றும் Noel Walker தம்பதியர், 3 முதல் 12 வயதுக்குட்பட்ட தங்களின் நான்கு குழந்தைகளுடன் Volkswagen வாகனத்தில், 200 நாள்கள் 13 நாடுகளைக் கடந்து, 13 ஆயிரம் மைல்கள் பயணம் செய்து வந்துள்ளனர். இக்குடும்பத்தின் அனுபவம் தன் உள்ளத்தை மிகவும் தொட்டதாக அருள்பணி லொம்பார்தியிடம் திருத்தந்தை கூறியுள்ளார். இக்குருத்துவக் கல்லூரியில் ஆயர்களைச் சந்தித்த பின்னர், அக்குருத்துவக் கல்லூரியிலிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Curran-Fromhold சிறைச்சாலை சென்று கைதிகளைச் சந்தித்து உரையாற்றினார் திருத்தந்தை. கைதிகள் திருத்தந்தைக்கென தயாரித்த அழகான மர நாற்காலியில் அமர்ந்தார் திருத்தந்தை. சில கைதிகளைத் தனித்தனியே அரவணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் திருத்தந்தை. பின்னர் ஃபிலடெல்பியா புனித சார்லஸ் பொரோமேயோ குருத்துவக் கல்லூரி சென்று மதிய உணவருந்தினார். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் அங்கிருந்து விடைபெற்று, பெஞ்சமின் பிராங்க்ளின் பூங்கா சென்றார். செல்லும் வழியில், ஃபிலடெல்பியாவில் இயேசு சபையினர் நடத்தும் புனித யோசேப் பல்கலைக்கழகம் சென்று, யூத-கத்தோலிக்க ஒன்றிப்பை அறிவிக்கும் வெண்கலச் சிலை ஒன்றையும் ஆசிர்வதித்தார். நம் காலத்தில் தொழுகைக்கூடமும், திருஅவையும் என்பதைக் குறிக்கும் ஒரே மாண்புடைய இரு சகோதரி உருவங்கள் அதில் உள்ளன. கிறிஸ்தவம் மற்றும் யூத மதங்களுக்கிடையே உறவுகளைச் சீர்படுத்திய Nostra Aetate என்ற 2ம் வத்திக்கான் பொதுச் சங்கக் கொள்கைத் திரட்டு வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவின் நினைவாக இச்சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் திருத்தந்தையின் நீண்டகால நண்பரான ஆர்ஜென்டினா நாட்டு யூத ரபி ஆபிரகாம் ஸ்கோர்கா உட்பட பல்சமயத் தலைவர்கள் சிலரும், மாணவர்களும் கலந்துகொண்டனர். பின்னர் பெஞ்சமின் பிராங்க்ளின் பூங்கா சென்று ஏறத்தாழ பத்து இலட்சம் விசுவாசிகளுக்கு 8வது உலக குடும்பங்கள் மாநாட்டு நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றினார். இறைவனின் அன்பு எல்லாருக்கும் உரியது. இதை வேறு விதமாகச் சிந்திப்பது ஆபத்தானது என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை, குடும்பங்கள் அன்பில் தங்களை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். 

இத்திருப்பலியின் இறுதியில், 9வது உலக குடும்பங்கள் மாநாடு, 2018ம் ஆண்டில் அயர்லாந்து நாட்டுத் தலைநகர் டப்ளின் நகரில் நடைபெறும் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். உலக குடும்பங்கள் மாநாடு, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களால் 1981ம் ஆண்டு மே 9ம் தேதி உருவாக்கப்பட்டது. அன்பு நெஞ்சங்களே, திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளது போன்று, உலகின் குடும்பங்களுக்காகச் செபிப்போம். உலகில் உறுதியான குடும்பங்கள் அமைவதாக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.