2015-09-27 12:26:00

மதபாரம்பரியங்கள், வாழ்வுக்கு அர்த்தத்தைத் தர முயல்கின்றன


செப்.27,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிறப்பிடமாகிய இந்த சுதந்திர அரங்கின் முன் நின்று உரையாற்றுவது, என் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது.  இந்நாட்டின் சுதந்திர அறிக்கை, ஒவ்வொரு மனிதரின் உரிமைகளும் மாண்பும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்த உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அரசுகளின் கடமையாகிறது.

இந்நாட்டின் வரலாற்றை உற்று நோக்கினால், மனித உரிமைகளையும், மாண்பையும் காப்பாற்ற தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்துள்ள முயற்சிகளைக் காணலாம். எடுத்துக்காட்டாக,  அடிமை நிலை ஒழிப்பு, வாக்குரிமை, தொழிலாளர் உரிமை, நிறவெறி அகற்றுதல் என நிறைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். மனித மாண்பிற்கு மதிப்பளிக்கும் பண்புடன் நாம் உழைக்கும்போது, நம் நாடு புதுப்பிக்கப்படுகிறது, மற்றும், பலப்படுகின்றது. நம் கடந்த காலத்தை நாம் மறந்து விடக்கூடாது.

இந்நேரத்தில் மத விடுதலை குறித்து நான் உரையாட விரும்புகிறேன். மனச்சான்றிற்கு இயைந்த வகையில் இறைவனை நாம் வழிபடும் உரிமையையே இது குறிக்கின்றது. மக்களுக்கு உரிமைகளை மறுத்து, கேள்வியே கேட்க முடியாத ஒரு கொள்கையை வகுத்து, மக்களை அதிகாரம் செய்து, இவ்வுலகமே சுவர்க்கம் என்ற போலித்தனத்தை உருவாக்க முனைந்த கடந்த காலங்களை நாம் கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம். நம்முடைய மதபாரம்பரியங்களோ, வாழ்வுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் தர முயல்கின்றன.

உரையாடலையும், ஒப்புரவையும், சமூகத்தின் வருங்காலத்திற்கான அக்கறையையும், பொதுநலனுக்கான தியாகத்தையும், தேவையில் இருப்போருக்கு பணியாற்றுவதையும், மத பாரம்பரியங்கள் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றன. மனிதரின் உரிமைகள் குறித்த உண்மைகளையும் மாண்பையும் பறைசாற்றுவது, மத ஆன்மீகப் பணியின் இதய‌மாக உள்ளது. மத விடுதலையைக் கட்டுப்படுத்தவும், மதத்தின் பெயரால் பகைமையையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட ஆவல் கொள்ளும் இன்றைய உலகில், மத நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில், அமைதி, சகிப்புத்தன்மை, மற்றவர்களின் மாண்பு மற்றும் உரிமைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும்.

ஒன்றிப்பை உருவாக்கும் தாகத்தை முன்வைத்து,  அனைத்து பன்முக கலாச்சரங்களையும் வேறுபாடுகளையும் களைந்து, ஒருவித உலகமயமாக்கல் கொள்கையை வலியுறுத்த முனையும் ஓர் உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆனால், வேறுபாடுகளை விட்டுக்கொடுக்காமல், பன்மைத் தன்மையுடன் ஒன்றிப்பில் வாழமுடியும் என்பதை, தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டிய கடமையும் உரிமையும் மதங்களுக்கு உண்டு. 

ஏழைகளுக்காகப் பணியாற்றுவதிலும், மனிதமாண்பைக் காப்பதிலும், குடியேற்றதாரரின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அன்புடனும், அமைதியுடனும், சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முயலும் அனைத்து மதத்தினரையும் நான் பாராட்டுகிறேன்.

குடியேற்றதார மக்களே, நம்பிக்கை இழக்காதீர்கள். அதேவேளை, உங்கள் கடந்த காலத்தையும், உங்களுக்கே உரிய பாரம்பரியத்தையும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் குடியேறியுள்ள இந்தப் புதிய நாட்டிற்கு உங்களால் இயன்ற நல்ல பங்களிப்பை வழங்குங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.