2015-09-27 13:49:00

பிலடெல்ஃபியா புனிதர்கள் பேதுரு,பவுல் பசிலிக்காவில் திருப்பலி


செப்.27,2015. செப்டம்பர் 26, இச்சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த பத்தாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான நாள். நம் நகரங்களில் இறைவன் வாழ்கிறார், மாநகரங்கள் வெளிநாட்டவரையும் குடியேற்றதாரரையும் வரவேற்க வேண்டும் என்று நியுயார்க் மாநகரில் அழைப்பு விடுத்து அம்மாநகர் மக்களிடமிருந்து விடைபெற்று இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 8.40 மணிக்கு அமெரிக்க விமானத்தில் பிலடெல்ஃபியா மாநகரத்திற்கு புறப்பட்டார் திருத்தந்தை. திருத்தந்தை பயணம் மேற்கொண்ட இவ்விமானம், அமெரிக்கச் சுதந்திரச் சிலை மற்றும் எல்லிஸ் தீவுக்கு மேல் பறந்தபோது, திருத்தந்தையுடன் சென்ற நியுயார்க் கர்தினால் டோலன் அவர்கள், இவ்விரண்டின் வரலாற்று முக்கியத்துவத்தை திருத்தந்தைக்கு விளக்கினார். நியுயார்க் வளைகுடாவில் உள்ள சிறிய எல்லிஸ் தீவுதான், 1892ம் ஆண்டு முதல், 1954ம் ஆண்டுவரை, உலகின் பல இடங்களிலிருந்து வந்த குடியேற்றதாரர் அமெரிக்காவில் நுழைவதற்கு நுழைவாயிலாகப் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐந்தாவது பெரிய நகரமாகவும், பென்சில்வேனியா மாநிலத்தின் மிக முக்கியமான நகரமாகவும் அமைந்துள்ள பிலடெல்ஃபியாவுக்கு ஐம்பது நிமிடங்கள் விமானப் பயணம் செய்து அந்நகர் பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில் பிலடெல்ஃபியா நகரின் புனிதர்கள் பேதுரு, பவுல் பசிலிக்கா சென்று திருப்பலி நிறைவேற்றினார். 1600க்கும் மேற்பட்ட ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகள் கலந்துகொண்ட இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் திருஅவை எப்போதும் கல்விக்கும், மறைகல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த உறுதியான அடித்தளத்தின் மீது இன்னும் கூடுதலாக இந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது நம் கடமை. அருள்பணியாளர்கள், துறவியர் என்ற முறையில், நாம் தனி பொறுப்புக்கள் பெற்றிருந்தாலும், பொதுநிலையினரோடு இணைந்து, நம் பணிகளை இன்னும் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார். அன்னை மரியாவுக்கு நன்றியாக நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியின் இறுதியில், பிலடெல்ஃபியா பேராயர் சார்லஸ் ஷாபுட் அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். இத்திருப்பலியை நிறைவுசெய்து அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற புனித சார்லஸ் பொரோமேயோ குருத்துவக் கல்லூரி சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். 1832ம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த குருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் பாடல்பாடி திருத்தந்தையை வரவேற்றனர். அப்போது இந்திய இலங்கை நேரம் இச்சனிக்கிழமை இரவு 10.15 மணியாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.