2015-09-27 13:33:00

கடுகு சிறுத்தாலும் : உண்மையான மரியாதை


அந்த ஆசிரமத்தில் வயதான பெரிய ஞானி ஒருவர், மூப்பின் தளர்ச்சியால் படுத்திருந்தார். அவரைத் தேடி வந்த இளைஞர் ஒருவர், அவரிடம் சென்று, ஐயா, நான் வெகு தூரத்திலிருந்து வந்திருக்கிறேன் என்றார். சரி உனக்கு என்ன வேண்டும் மகனே என்று ஞானி கேட்க, நான் உங்களுக்குச் சீடனாக விரும்புகிறேன், அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா, இல்லையா என்பது தெரிய வேண்டும் என்றார் அந்த இளைஞர். சரி, உள்ளே வா. உனக்கு என்னால் இப்போது ஒரு காரியம் ஆக வேண்டும், கொஞ்ச நேரம் என் உடம்பில் ஏறி மிதிக்க வேண்டும் என்றார் ஞானி. ஐயா, அது மட்டும் என்னால் முடியாது. ஏன் என்றார் ஞானி. நீங்கள் ஒரு பெரிய ஞானி. நான் உங்கள் கால் தூசிக்கும் ஈடாக மாட்டேன். உங்கள் மீது என் கால் படுவதா? என்றார் இளைஞர். மகனே, எனக்கு இப்போது உடம்பு வலி என்று ஞானி சொன்னதும், பெரியவரே, அதற்காக என் உயிரையே வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறேன், ஆனால்  உங்களின் புனிதமான உடம்பை மட்டும் நான் மிதிக்க மாட்டேன் என்றார் இளைஞர். அதற்கு அந்த ஞானி, என்னுடைய உடம்பை மிதிக்க நீ மறுக்கிறாய்! ஆனால், என்னுடைய உதடுகளை உன் காலடியில் போட்டு மிதிக்கிறாய், குருவின் வார்த்தைகளை மிதிக்கிறவன் எப்படி அவரை மதிக்கிறவனாக ஆக முடியும் என்று கேட்டார் ஞானி. அந்த இளைஞர் குழம்பினார். மரியாதைக் குறைவாகத் தோன்றுகிற செயல்கள் எல்லாம் மரியாதைக் குறைவான செயல்கள் அல்ல என்று சொல்லி, ஞானி இளைஞரின் குழப்பத்தைத் தெளிவுபடுத்தினார்.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.