2015-09-27 13:39:00

ஃபிலடெல்பியாவில் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.27,2015. அன்பு நெஞ்சங்களே, இஞ்ஞாயிறு உலக கத்தோலிக்க  குடும்பங்கள் விழா என்றே சொல்ல வேண்டும். அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்பியாவில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற 8வது உலக குடும்பங்கள் மாநாட்டு நிகழ்வுகளில் உலகின் ஐந்து கண்டங்களிலிருந்தும் பல்வேறு வயதுடைய தம்பதியர் தங்களின் குழந்தைகளுடன் கூடியிருந்து குடும்பங்கள் குறித்த பல நற்சிந்தனைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அதன் உச்ச கட்டமாக இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை நான்கு மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஃபிலடெல்பியா பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பூங்காவில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு இக்குடும்ப விழா நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றினார். இதற்கு முன்னர் இஞ்ஞாயிறு காலை 9.15 மணிக்கு, ஃபிலடெல்பியா புனித சார்லஸ் பொரோமேயோ குருத்துவக் கல்லூரியில் ஆயர்களைச் சந்தித்தார். திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்திற்கு உதவிய நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களை ஃபிலடெல்பியா பன்னாட்டு விமான நிலையத்தில் சந்தித்து நன்றி தெரிவித்து, இந்த பத்தாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து உரோம் நகருக்குப் புறப்படுவது இஞ்ஞாயிறு பயணத் திட்டத்தில் இருந்தன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை பத்து மணியளவில் உரோம் வந்து சேர்வார். அப்போது இந்திய இலங்கை நேரம் இத்திங்கள் பகல் 1.30 மணியாக இருக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.