2015-09-26 14:43:00

பொதுக்காலம் 26ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


வத்திக்கான் வானொலியில் என்னோடு பணியாற்றும் நண்பர் ஒருவருடன் ஞாயிறு நற்செய்தியைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். "இந்த ஞாயிறு நற்செய்தியை நற்செய்தின்னு சொல்றதுக்கே தயக்கமாயிருக்கு, ஏன்னா, இயேசு, கையை, காலை வேட்டிகிறதைப் பத்திக் கொஞ்சம் கடுமையாப் பேசியிருக்கார்" என்று சொன்னேன்.

அந்த நற்செய்தியை ஒருமுறை பார்த்த நண்பர், "நல்ல வேளை, அவங்கவுங்க, தங்களுடைய கையையோ, காலையோ வெட்டிக்கிறதைப் பத்திதானே இயேசு சொல்லியிருக்கார், அடுத்தவங்க கையையோ, காலையோ வெட்டச் சொல்லலியே" என்று அவருக்கே உரிய நகைச்சுவைக் கலந்த தொனியில் சொன்னார். அவர் சொன்ன நகைச்சுவை கூற்று என் சிந்தனையை ஆரம்பித்து வைத்தது.

இயேசு வாழ்ந்த காலத்தில், யூத சமுதாயம், எளிதாக, அடுத்தவர் கையை, காலை வெட்டுகின்ற சமுதாயமாக இருந்தது. "ஆவூன்னா அரிவாளைத் தூக்கிடுறான்களே" என்று நம் திரைப்படங்களில், நகைச்சுவை நடிகர்கள் குறிப்பிடுவது, இந்த சமுதாயத்திற்குப் பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பழிக்குப் பழி வாங்குவதில் அதிகத் தீவிரமாய் இருந்தவர்கள் யூதர்கள். இதனால்தான், இயேசு, அவர்களைப் பார்த்து "'கண்ணுக்குக் கண்', 'பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்" (மத்தேயு 5: 38-39) என்ற மாறுபட்ட பாடத்தைச் சொல்லித்தந்தார். மறுகன்னத்தை திருப்பிக் காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நம் கதையோ வேறு.

‘பழிக்குப் பழி வேண்டாம், மறுகன்னத்தைக் காட்டுங்கள்’ என்று அமைதியாக பேசும் இயேசுவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அனால், ‘கையை, காலை வெட்டிவிடுங்கள்’ என்று, கடுமையாகப் பேசும் இயேசுவைப் புரிந்து கொள்வது, நமக்குக் கடினமாக உள்ளது.

சாட்டையடிபட்டு, சிலுவையில் தொங்கும் இயேசுவைப் புரிந்துகொள்ள முடிகிறது. அனால், சாட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு, கோவிலிலிருந்து வியாபாரிகளை விரட்டினாரே, அந்த இயேசுவைப் புரிந்து கொள்வது, கடினமாக உள்ளது.

அப்படி ஒரு சவாலை இன்றைய நற்செய்தி தருகிறது. இந்த இயேசுவைப் புரிந்து கொள்ள, அவர் சொல்லும் வார்த்தைகள் எந்த பின்னணியிலிருந்து வருகின்றன என்று தேடிப் பார்க்கவேண்டும். பின்னணியை விட்டுவிட்டு, இயேசுவின் வார்த்தைகளைத் தனியே எடுத்து, வெறும் மேற்கோளாக ஒரு சிலர் பேசும்போது, நான் சங்கடத்தில் நெளிந்ததுண்டு. ‘மறு கன்னத்தைக் காட்டுங்கள்’ என்று அறிவுரை கூறும் இயேசு, தலைமைக் குருவின் ஊழியன் அவரை அறையும்போது, மறு கன்னத்தைக் காட்டவில்லையே. மாறாக, அவரிடம், ‘என்னை ஏன் அறைகிறாய்?’ என்று கேள்வி கேட்டார். சூழ்நிலை, பின்னணி இவற்றோடு, இயேசுவின் கூற்றுக்களைப் பார்ப்பது பயனளிக்கும்.

இன்று இயேசு நற்செய்தியில் கூறும் வார்த்தைகளுக்குப் பின்னணி என்ன? சென்ற வார நற்செய்தியின் தொடர்ச்சியாகவும் இதைப் பார்க்கலாம். சென்ற வாரம், ஒரு குழந்தையை மையமாக்கி, இயேசு தன் சீடர்களுக்குச் சவால் விடுத்தார். இவர்களில் ஒருவரை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுங்கள், இவர்களைப் போல் மாறுங்கள் என்று கூறிய இயேசு, இந்தக் குழந்தைகளுக்குப் பெரியோர் வழியாக உருவாகும் ஆபத்துக்களை நினைத்துப் பார்க்கிறார். சூடாகிப் போகிறார். குழந்தைகள் மட்டும் அல்ல, குழந்தை மனம் கொண்டவர்கள், ஏழைகள்... சமுதாயத்தில் சிறியவர்கள்... "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது"  (மாற்கு நற்செய்தி 9: 42) என்று சொல்கிறார்.

சமுதாயம் என்ற உடலுக்குக் கேடு விளைவிக்கும் அங்கம் நீக்கப்பட வேண்டும். இப்படி, சமுதாயத்திலிருந்து ஒவ்வொருவரையாக கடலில் தள்ளினால், கடல் நிறைந்து விடும், நிலம் காலியாகிவிடும். இதற்கு ஒரு மாற்று? இயேசு சொல்லும் அடுத்த வாக்கியங்கள். சமுதாயத்தில் விஷமாக மாறுவதற்கு பதில், ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி யோசித்து, அவரவர் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவேண்டும். அப்படி மாற்றுவதற்கு, அவரவர் உடலில் இருக்கும் தடைகளை நீக்கவேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தவே, கண்ணைப் பிடுங்கி எறியுங்கள், கை, கால் இவற்றை வெட்டிப் போடுங்கள் என்று கடுமையாகச் சொல்வது போல் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்ததாய் சொல்லப்படும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இரயில்வேத் துறையில் பணிபுரிந்த ஒருவர், தனியே ஏதோ ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு பாம்பு அவரது கையைக் கடித்து விடுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு. மருத்துவமனை செல்வதற்கு வசதிகள் குறைவு. அதுவரை காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து. அவர் செய்தது என்ன? அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். தன் கையை வெட்டிக்கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவரைப் பொருத்தவரை, கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.

இது போன்ற எத்தனையோ சம்பவங்களை நம் கேட்டிருப்போம். பல நேரங்களில் மருத்துவ மனைகளில் இந்தக் கேள்வி எழும். உங்களுக்கு கை வேணுமா? உயிர் வேணுமா? கால் வேணுமா? உயிர் வேணுமா? என்ற கேள்விகள் கேட்கப்படும். காயப்பட்டு புரையோடிப்போன கையையோ, காலையோ வெட்டி, எத்தனையோ பேருடைய உயிரை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். உயிரா அல்லது உறுப்பா என்ற கேள்வி எழும் போது, ஒரு கையோ, காலோ, கண்ணோ இல்லாமல் உயிர் வாழ்வது மேல் என்று எத்தனையோ பேர் முடிவெடுத்திருக்கலாம். வேறு எந்த வழியும் இல்லை என்ற கடைசி நிலையில் எடுக்கப்படும் முடிவு அது.

உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலை ஒரு நாளில் வரும் நிலை அல்ல. அந்த நிலை, வழக்கமாக, சிறுகச் சிறுகத்தான் வரும். பாம்பு கடித்து கையை வெட்டிக்கொள்வது போன்ற சம்பவங்கள் மிக அரிதாக நடக்கும். ஆனால், மருத்துவமனைகளில் உயிரா, உறுப்பா என்ற கடைசி நிலைக்குத் தள்ளப்படும் நிலை, அடிக்கடி நடக்கும் நிகழ்வுதானே. அந்த நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுடைய வாழ்க்கையைப் புரட்டிப்பார்த்தால், கொஞ்சம் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக, முதலில் சர்க்கரை வியாதி வரும். அந்த நிலை வருவதை, பல சமயங்களில் தடுக்கலாம். பலருக்கு அது பிறவியிலேயே வந்து சேரும் பிரச்சனை. சரி... அந்த குறை இருக்கிறதென்று கண்டுபிடித்தவுடன், கவனமாகச் செயல்படலாமே. நமது உணவுப் பழக்கங்கள், தினமும் உடற்பயிற்சி, ஒரு சில மருந்துகள் என்று காட்டுப்பாட்டுடன் வாழ்ந்தால், இந்தக் குறையோடு பல ஆண்டுகள் வாழ முடியும். அப்படி வாழ்பவர்களை எனக்குத் தெரியும். ஆனால், இந்தக் கட்டுப்பாடெல்லாம் இல்லாமல், அல்லது இந்த காட்டுப்பட்டை எல்லாம் அடிக்கடி மீறி, வம்பை வலியச் சென்று வரவழைத்துக் கொண்டவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். வழியோடு போகும் பாம்புடன், விளையாடுபவர்கள், இவர்கள். இன்னும் சிலர், பாம்பு வாழும் புத்துக்களைத் தேடிச்சென்று, புத்தில் கைகளைவிட்டு விளையாட நினைப்பவர்கள். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பல பழக்கங்களைத் தேடிச் செல்பவர்களை நாம் அறிவோம்.

சர்க்கரை வியாதியால் துன்புறுகிறவர்களை மீண்டும் எண்ணிப் பார்ப்போம். கட்டுப்பாடுகள் இல்லாமல் அவர்கள் வாழும்போது, திடீரென, கையிலோ, காலிலோ, ஒரு காயம் ஏற்பட்டால், அதுவும் அவர்களுக்கு வரும் மற்றோர் எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளலாம், வாழ்வை மாற்றிக்கொள்ளலாம். அந்த எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாமல், அவர்கள் தன்னிச்சையாக வாழும்போது, இறுதியில், மருத்துவ மனைகளில் உயிரா, உறுப்பா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.

உடலுக்கு நலம் தராத பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும்.

தேவையற்ற ஆபத்துக்களை வாழ்விலிருந்து நீக்க வேண்டும்.

இந்த அறிவுரைகள், எல்லாருக்குமே நல்லதுதானே!

இயேசு இவற்றைத்தான் கொஞ்சம் ஆழமாக, அழுத்தமாக, கோபமாகச் சொல்லியிருக்கிறார். அவர் கோபமாக சொல்கிறாரோ, சாந்தமாகச் சொல்கிறாரோ... அவர் சொல்வதில் உள்ள உண்மையை உணர்வது, அதன்படி வாழ்வது, நமக்கு நல்லதுதானே!

"இவ்வுலகில் நீ காணவிழையும் மாற்றம் உன்னில் ஆரம்பமாகட்டும்" - “You must be the change you want to see in the world.” என்று சொன்னவர், மகாத்மா காந்தி.

"உனக்குள் நீ மாற்றத்தை உருவாக்கவில்லையெனில், உன்னைச் சுற்றி மாற்றத்தை உருவாக்க முடியாது" என்பது மற்றொரு பொன்மொழி.

தன் அரண்மனையைவிட்டு வெளியே வராத ஓர் அரசர், அன்று, மாறுவேடத்தில், நகர வீதிகளில் நடந்து சென்றார். ஆனால், வெகு சீக்கிரமே அரண்மனைக்குத் திரும்பிவிட்டார். அவரிடம் மந்திரி காரணம் கேட்டபோது, அரசர், தான் நடந்து சென்ற பாதையில் கல்லும், முள்ளும் இருந்ததால், அவை தன் காலைக் காயப்படுத்திவிட்டன என்று அரசர் சொன்னார். அத்துடன், இனி வீதிகளில் நடக்கும் யாருக்கும் முள் குத்தக்கூடாது என்பதற்காக, அனைத்து வீதிகளிலும், மாட்டுத் தோலை பரப்பவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கத் தயாரானார்.

இதைப்பற்றி கேள்விப்பட்ட மந்திரி, அரசரிடம் சென்று, "அரசே, ஊரெங்கும் மாட்டுத் தோலைப் பரப்புவதற்குப் பதில், உங்கள் கால்களை மாட்டுத் தோல்கொண்டு மூடிக்கொண்டு நடந்தால், பிரச்சனை தீர்ந்துவிடுமே" என்று ஆலோசனை கூறினார்.

ஊரையும், உலகத்தையும் மாற்றுவதற்கு ஓர் ஆரம்பமாக, நம்மை மாற்றிக் கொள்வது நல்லது. அந்த மாற்றம் இன்றே ஆரம்பமானால், மிகவும் நல்லது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.