2015-09-26 15:59:00

தூதர்களின் நமது அன்னை பள்ளியில் திருத்தந்தை


செப்.26,2015. இவ்வெள்ளி மாலை 3.45 மணிக்கு தூதர்களின் நமது அன்னை பள்ளிக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். சிறார் சந்திப்பு என்றாலே திருத்தந்தைக்கு களைப்பெல்லாம் பறந்துவிடும். இவ்விடத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் ஏறக்குறைய 300 சிறாரைச் சந்தித்தார். இவர்களில் 64 விழுக்காட்டுச் சிறார் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்பவர்கள். பெரும்பாலானவர்கள் சிறுபான்மை இனம் மற்றும் குடியேற்றதாரச் சிறார்.  மூன்றில் ஒரு பகுதியினர் கத்தோலிக்கரல்லாதவர்கள். பாதிக்கும் மேற்பட்டவர்கள், பெற்றோரில் ஒருவரால் வளர்க்கப்படுபவர்கள். அப்பள்ளியின் வகுப்பறையில் நுழைந்த திருத்தந்தையைப் பார்த்தவுடன் மகிழ்ச்சி மற்றும் வியப்பின் உச்சத்திற்குச் சென்ற சிறார், மிக மெல்லிய குரலில் பாடினர். அதோடு நீண்ட நேரம் காத்திருந்த களைப்பு வேறு. நீங்கள் பாடுகிறீர்களா அல்லது தூங்குகிறீர்களா என்று கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார் திருத்தந்தை. ஒரு சிலுவை, ஆயிரம் குடியேற்றதாரர் கதைகளைக் கொண்ட புத்தகம், குடியேற்றதாரத் தாய்மார்களால் நெய்யப்பட்ட ஒரு மேஜை விரிப்பு, குடியேற்றதாரத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு வெள்ளைத் தொப்பி, ஓர் இடுப்பு தோல் கச்சை போன்றவற்றைத் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தனர். ஸ்மார்ட் பலகையைப் பயன்படுத்துவது எப்படி என்றுகூட சிறார் திருத்தந்தைக்குக் கற்றுக் கொடுத்தனர். மிக ஆனந்தமாக சிறார் மத்தியில் இருந்த திருத்தந்தை, சிறாரிடம், மார்ட்டின் லூத்தர் கிங் போன்று கனவு காணுங்கள் என்று ஊக்கப்படுத்தினார். மிகுந்த வாய்ப்புக்களோடு உள்ள சிறந்த உலகு குறித்து நம்பிக்கை வைப்பதை இழக்க வேண்டாம், எங்கெல்லாம் கனவுகள் உள்ளனவோ அங்கே மகிழ்வு உண்டு, இயேசு எப்போதும் பிரசன்னமாய் இருக்கிறார். உங்களுக்கு ஒரு வீட்டுப்பாடம் கொடுக்கிறன். நீங்கள் எனக்காகச் செபிக்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை. ``When the Saints Go Marching In'' என்ற பாடலின் வார்த்தைகளை மாற்றி ``when the pope goes marching in'' என்று சிறார் பாடினர். வழியில் 150 குடியேற்றதாரர் திருத்தந்தையை வாழ்த்தினர். பலத்த பாதுகாப்பையும் மீறி ஒரு சிறுமி திருத்தந்தையை கட்டித் தழுவி முத்தமிட்டார். குடும்பத்தினருடன் இப்பள்ளியில் இருந்த சிறாரை ஆசிர்வதித்து, அவர்களிடமிருந்து விடைபெற்று Madison விளையாட்டு அரங்கம் சென்றார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.