2015-09-26 14:01:00

ஐ.நா. பொது அவை 70வது அமர்வில் திருத்தந்தை வழங்கிய உரை


செப்.26,2015. அவைத் தலைவரே, மதிப்பிற்குரிய பெண்மணிகளே, ஆடவரே, ஐக்கிய நாடுகளின் 70வது அமர்விற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவர் வழியாகவும், நான் உங்கள் நாட்டு மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

ஐக்கிய நாட்டு அவைக்கு ஒரு திருத்தந்தை வருகை தருவது, இது ஐந்தாவது முறை. என் முன்னோர்களான, 6ம் பவுல், 2ம் யோவான் பவுல், 16ம் பெனடிக்ட் ஆகியோரைத் தொடர்ந்து, நானும் இங்கு வந்துள்ளேன். இந்த அவை மீது அவர்கள் அனைவரும் பெரும் மதிப்பு கொண்டிருந்தனர். நம்வசம் உள்ள தொழில் நுட்பங்களைக் கொண்டு, தூரங்களை வென்று, ஒட்டுமொத்த உலகிற்கு தகுந்த அரசியல் முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டது இந்த அவை என்று அவர்கள் உணர்ந்ததுபோலவே, நானும் உணர்ந்துள்ளேன்.

ஐ.நா. அவை தன் 70ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. பன்னாட்டு விதிகள், மனித உரிமைகள் ஆகியவற்றை உருவாக்குவதல், மோதல்களுக்குத் தீர்வு காணுதல், அமைதியையும், ஒப்புரவையும் உறுதி செய்தல் ஆகியவை, இந்த அவையின் சாதனைகளில் ஒருசில.

Dag Hammarskjöld உட்பட, அமைதியையும், ஒப்புரவையும் உருவாக்கும் பணியில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவருக்கும் என் வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

சாதனைகளைக் கடந்து, கடந்த 70 ஆண்டுகளின் அனுபவம் நமக்குச் சொல்லித்தருவது ஒன்று உள்ளது. அனைத்து நாடுகளும் சமத்துவமான மதிப்பும், உரிமைகளும் பெறவேண்டும் என்பதே நம் அனுபவம் சொல்லித் தருவது. பாதுகாப்பு அவை, நிதி நிறுவனங்கள் அனைத்திலும், முடிவெடுக்கும் உரிமை அனைத்து நாடுகளுக்கும் வழங்குவதையும், நம் 70 ஆண்டு அனுபவம் சொல்லித் தருகிறது.

நீதியின் வழி ஏற்படும் முன்னேற்றம் என்பது, ஐ.நா. அவை உருவாக்கியுள்ள விதிமுறைகளின் முதல் பகுதியிலேயே சொல்லப்பட்டுள்ளது. பாரம்பரிய இலக்கணத்தின்படி, நீதி என்பது, எந்த தனிமனிதரும், குழுவும் தாங்களே அனைத்து உரிமைகளும் பெற்றவர்கள் என்றும், மற்ற குழுக்களின் மாண்பையும், உரிமைகளையும் ஒதுக்கிவிடலாம் என்றும் எண்ணுவது அல்ல.  

அதிகாரம் ஒரு சிலர் கைகளில் குவிந்துவிடும் ஆபத்தைத் தவிர்ப்பதற்கு, அனைவரும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது ஒரு சிறந்த வழியாகும். ஒரு சிலர் கைகளில் குவிந்துவிடும் அதிகாரத்தால், சுற்றுச்சூழல் சீரழிகிறது, சமுதாயத்தில் நலிந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மனித குலத்திற்கு ஏற்படும் ஆபத்து.

இயற்கை, இறைவனின் படைப்பு என்பதையும், படைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் மனிதருக்கு, இயற்கையைச் சீரழிக்கும் அதிகாரம் இல்லை என்பதையும், ஒரே கடவுளை வணங்கும் பல மதத்தவரைப் போல, கிறிஸ்தவர்களும், நம்புகின்றனர். சுற்றுச்சூழலின் அழிவு, மனிதர்களை ஒதுக்குவதோடு தொடர்புள்ளது. இயற்கை வளங்களின் பெரும்பகுதியை ஒரு சிலரே சுற்றிவளைத்துக் கொள்வதால், பலர் இந்த வளங்களை அடையமுடியாமல் ஒதுக்கப்படுகின்றனர். இயற்கை வளங்கள், பொருளாதாரம், சமுதாயம் என்ற அனைத்து நிலைகளிலும் வறியோர் பெருமளவு ஒதுக்கப்படுகின்றனர்.

 

'இருக்கும் வளங்களைக் கொண்டு நிலையான முன்னேற்றம் - 2030ம் ஆண்டு நோக்கி' என்ற கருத்துடன் இன்று துவங்கும் இந்த அமர்வு, நம்பிக்கை தரும் ஓர் அடையாளம். இதேபோல், பாரிஸ் மாநகரில் கூடவிருக்கும் காலநிலை மாற்றம் உச்சி மாநாடும், அனைத்து மக்களுக்கும் தேவையான முடிவுகளை எடுக்கும் என்று நம்புகிறேன்.

முடிவுகள் எடுப்பது மட்டும் போதாது; அயரா முயற்சியுடன், அவை, தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மனித வர்த்தகம், அடிமைத் தொழில், பாலியல் கொடுமைகளுக்கு சிறுவர் சிறுமியர் இலக்காதல், ஆயுத விற்பனை, உலக அளவில் மேற்கொள்ளப்படும் குற்றத்தொழில், தீவிரவாதம் எனும் பல குறைகளையும் நீக்க,  உலகின் அனைத்து அரசுகளும், நீண்ட கால முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

மிகக் கடுமையான வறுமையிலிருந்து மனிதர்கள் வெளியேற வேண்டுமெனில், தங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் சக்தியை அவர்களுக்கு வழங்கவேண்டும். இதற்கு, கல்வி ஒரு முக்கிய கருவியாக மாறவேண்டும். மனிதர்கள் அனைவருக்கும் இவ்வுலக நன்மைகளும், ஆன்மீக நன்மைகளும் குறைந்தபட்ச அளவிலாவது கிடைப்பதை, அரசுத் தலைவர்கள் உறுதி செய்யவேண்டும். இவ்வுலக நன்மை என்றால், அது, உறைவிடம், தொழில் மற்றும் நிலம் என்ற மூன்று அம்சங்கள். ஆன்மீக நன்மை என்பது, மத உரிமை, கல்வி, மற்றும் குடியுரிமை ஆகியவற்றில் அடங்கும்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், வாழும் உரிமை, மற்றும் சுற்றுச்சூழலை வாழவிடுதல் என்ற இரு தூண்களின் மேல் தாங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அழிவு, பன்முக உயிர்களின் அழிவு ஆகிய இரண்டும், மனிதகுலத்தையே அழித்துவிடும் ஆபத்து உள்ளது. மனிதர்கள், தங்களைத் தாண்டி ஒன்றும் இல்லை என்ற உணர்வில் வாழும்போது, தங்களைச் சுற்றி இத்தகைய அழிவை உருவாக்குகிறார்கள். தங்களையும் தாண்டிய உண்மைகள் உள்ளன என்பதை உணரும்போதுதான், நன்னெறி விழுமியங்களும் மதிக்கப்படுகின்றன.

போரினால், அனைத்து உரிமைகளின் மறுப்பும், சுற்றுச்சூழல் அழிவும் அரங்கேறுகின்றன. போரைத் தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் முயற்சிகள் செய்யவேண்டும்.

ஐ.நா.அவையின் அடிப்படைக் கொள்கைகள் சொல்வதுபோல், உரையாடல்கள், ஒப்பந்தங்கள் என்ற சுமுகமான வழிகளை நாடுகள் பின்பற்றவேண்டும். இதற்கு மாறாக, நாடுகள், தங்களுக்குச் சாதகமாக இருக்கும்போது மட்டும், ஐ.நா.கொள்கைகளைப் பின்பற்றினால், குழப்பமும் அழிவுமே மிஞ்சும்.

அணுசக்தியைக் குறித்து ஆசியா, மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதிகளில், அண்மையில் உருவாகியுள்ள ஒப்பந்தம், நாடுகளிடையே நிலவவேண்டிய புரிதலையும், நல் மனதையும் வெளிப்படுத்துகிறது. இந்த ஒப்பந்தம் நீண்ட கால நல் விளைவுகளை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.

இத்தருணத்தில், மத்தியக் கிழக்குப் பகுதியிலும், வட ஆப்ரிக்காவிலும் கிறிஸ்தவர்கள், சிறுபான்மையினர், மற்றும் அடிப்படைவாதத்தை விரும்பாதவர் ஆகிய அனைவரும் அனுபவித்துவரும் கொடுமைகளைக் குறித்து, என் விண்ணப்பங்களை மீண்டும் ஒருமுறை இந்த அவையில் சமர்ப்பிக்கிறேன்.

எந்த ஒரு மோதலிலும் தனிப்பட்ட மனிதர்கள், அதாவது, நமது சகோதர, சகோதரிகள், இளையோர், முதியோர், குழந்தைகள் ஆகியோர் இறக்கின்றனர், துன்புறுகின்றனர்.

மோதல்களால் மக்கள் இறப்பது பற்றி பேசும்போது, மக்களின் கவனத்தை ஈர்க்காமல், அமைதியாக நடைபெறும் பல்லாயிரம் மரணங்களை நினைத்துப் பார்க்கிறேன். போதைப்பொருள் வர்த்தகத்தால் இறப்பவர்களைக் குறித்துப் பேசுகிறேன். போதைப்பொருள் வர்த்தகம் என்ற உலகளாவிய வலையில், ஆயுத விற்பனை, சிறுவர், சிறுமியர் விற்பனை, கறுப்புப்பணப் புழக்கம் போன்ற பல்வேறு அநீதிகள் இடம்பெறுகின்றன. உலகெங்கும் பரவியுள்ள போதைப்பொருள் வலை, பல நாடுகளில், அரசுக்கு இணையாக மற்றொரு அரசைப் போலச் செயல்படுகிறது.

இந்த அவைக்கு வருகை தந்துள்ள முந்தையத் திருத்தந்தையர்களில் ஒருவரான ஆறாம் பவுல் அவர்கள், இந்த அவையில்  சொன்ன வார்த்தைகளை நினைவுகூர விரும்புகிறேன்: "நிதானித்து, நேரம் ஒதுக்கி, செபம் செய்யும் நேரம் வந்துள்ளது. முன்னெப்போதும் தேவைப்படாத அளவு, மனித மனசாட்சியைத் தட்டியெழுப்பும் தருணம் வந்துள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள், மனிதர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வதற்குப் பதில், பெரும் அழிவுக்கு இட்டுச் செல்கின்றன. ஆன்மீக அடித்தளத்தின் மேல் மனிதகுலம் கட்டியெழுப்பப்பட்டால் அது நிலைத்து நிற்கும்."

பல்வேறு வழிகளில் இணைக்கப்பட்டதாக உணரும் இன்றைய உலகம், வளர்ந்துவரும் சமுதாயக் கூறுபாடுகளால் துன்புறுகிறது. தன்னலம் மிகுந்த, தனிப்பட்ட, கொள்கைகளைத் தவிர்த்து, பொதுநலனை முன்வைத்து செல்வதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.

இதற்காக நான் இறைவனிடம் செபிக்கிறேன். கத்தோலிக்கத் திருஅவையைச் சார்ந்த அனைவரின் செபங்களும் இந்த அவைக்கு உண்டு. ஒவ்வொரு தனி மனிதருக்கும், சமுதாயத்திற்கும் நன்மைகள் தரும் முடிவுகளை இந்த அமர்வில் நீங்கள் எடுக்கவேண்டும் என்று செபிக்கிறேன். உங்கள் அனைவர் மீதும், உங்கள் நாட்டு மக்கள் அனைவரின் மீதும் இறைவனின் ஆசீர் வந்திறங்க வேண்டுகிறேன். நன்றி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.