2015-09-26 16:03:00

Madison விளையாட்டு அரங்கத்தில் திருப்பலி


செப்.26,2015. Madison பெரிய விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி பெரிய தோட்டமும் உள்ளது. இங்கு இவ்வெள்ளி மாலை 6 மணிக்கு திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். கர்தினால் டோலன் அவர்கள், திருத்தந்தையே நாங்கள் உம்மை அன்பு கூருகிறோம், தினமும் உங்களுக்காகச் செபிக்கிறோம் என்று வரவேற்றுப் பேசினார். ஓக் மரத்தில் தொழிலாளர்கள் இலவசமாக செய்து கொடுத்த மர நாற்காலியில் திருத்தந்தை இத்திருப்பலியில் அமர்ந்தார். எண்பதாயிரத்திற்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்துகொண்ட இத்திருப்பலியில் ஆற்றிய உரையில் மாநகரங்களின் பன்மைத்தன்மையைப் பாராட்டி, வெளிநாட்டவரையும் குடியேற்றதாரரையும் வரவேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இறைவன் நம் நகரங்களில் வாழ்கிறார் என்று மறையுரையாற்றி, திருப்பலியைத் தொடர்ந்து நிகழ்த்தி அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியுடன் இவ்வெள்ளி தின நிகழ்வுகள் நிறைவடைந்தன. இச்சனிக்கிழமை காலை 8.40 மணிக்கு நியுயார்க்கிலிருந்து பிலடெல்பியாவுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை. நியுயார்க்கில் தலைவர்கள் மற்றும் பலரிடமிருந்து பல பரிசுப் பொருள்களைப் பெற்றுச் சென்றார் திருத்தந்தை. நியுயார்க் ஆளுனர் Andrew Cuomo, தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையத்திலிருந்து கிடைத்த இரும்பினால் ஆன சிறப்பு சிலுவை ஒன்றை திருத்தந்தைக்கு அளித்தார். நியுயார்க் மேயர் Bill de Blasio, அந்நகரின் அடையாள  அட்டையை திருத்தந்தைக்கு அளித்தார். சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களைப் பாதுகாக்கும் திருத்தந்தையின் செய்தியின் உண்மையான அடையாளமாக இந்த அடையாள அட்டைகள் உள்ளன. இத்தகைய அட்டைகளை ஐந்து இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வைத்துள்ளனர். திருத்தந்தை, நியுயார்க் மக்களை பல வகைகளில் உற்சாகப்படுத்தியதை அந்நகரில் காணமுடிகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.