2015-09-25 17:08:00

நியுயார்க் புனித பேட்ரிக் பேராலயத்தில் திருத்தந்தை


செப்.25,2015. வியாழன் மாலை 3.45 மணிக்கு வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் இராணுவ விமான நிலையம் சென்று நியுயார்க் மாநகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஒரு மணி நேரம் பயணம் செய்து நியுயார்க் ஜான் கென்னடி விமான நிலையம் சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை 200 பேர் கொண்ட சிறிய குழு வத்திக்கான் கொடிகளை வைத்துக்கொண்டு வரவேற்றது. நியுயார்க், நியுயார்க் என உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பாடல் பாடினர். அந்நகரின் 86 கத்தோலிக்கப் பள்ளி மாணவர்களின் செபங்கள் எழுதப்பட்ட மலர்க்கொத்தும் திருத்தந்தைக்கு அளிக்கப்பட்டது. கர்தினால் திமோத்தி டோலன் உட்பட பலர் திருத்தந்தையை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தூரம் ஹெலிகாப்டரில் மன்ஹாட்டன் சென்றார். பின்னர் அங்கிருந்து கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் நியுயார்க் புனித பேட்ரிக் பேராலயத்திற்குச் சென்றார். சாலையெங்கும் மக்கள் இருபக்கங்களிலும் திரண்டிருந்து, கைகளைத் தட்டி வாழ்த்தொலிகளை எழுப்பினர். வழியில் குழந்தைகளை முத்தமிட்டார் திருத்தந்தை. மக்களில் சிலர் திருத்தந்தையைக் கட்டித் தழுவினர். ஆலயத்திற்குள் திருத்தந்தை சென்றபோது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு சிறுமி, குழந்தையுடன் இருந்த ஒரு தாய் ஆகியோரையும் முத்தமிட்டார். அருள்பணியாளர் மற்றும் துறவியருடன் கலந்து கொண்ட மாலை வழிபாட்டில் நியுயார்க் ஆளுனர் Andrew Cuomo, மேயர் Bill de Blasio, அமெரிக்க ஐக்கிய நாட்டு செனட்டர் Charles Schumer, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸ்ஸிங்கர் மற்றும் சில அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இவ்வழிபாட்டில் மறையுரையாற்றியபோது, சவுதி அரேபியாவின் புனித மெக்கா நகருக்கு அருகில் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட திருப்பயணிகளுள் நெரிசலில், இறந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தனது செபத்தையும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தார். இதில் 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அருள்பணியாளர் மற்றும் துறவியரும், துன்பநேரங்களிலும்கூட தங்களின் அழைப்புக்கேற்ப வாழுமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்புடன் இவ்வியாழன் நிகழ்வுகள் முற்றுப்பெற்றன. வருகிற டிசம்பர் 8ம் தேதி தொடங்கும் இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டில் ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் செபமாலை செபிக்கப்படும். இவ்வளாகத்திலுள்ள தூய பேதுரு திருவுருவத்திற்கு முன்னர் நடைபெறும் இச்செபத்தை ஏதாவது ஓர் உரோம் பங்கு அல்லது துறவு சபைகள் வழிநடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.