2015-09-25 16:58:00

இறையழைப்பை தொடர்ந்து மகிழ்வுடன் வாழுங்கள், திருத்தந்தை


செப்.25,2015. நியுயார்க் புனித பேட்ரிக் பேராலயத்தில் அருள்பணியாளர் மற்றும் துறவியருடன் கலந்து கொண்ட இந்த மாலை திருவழிபாட்டில் மறையுரையாற்றிய திருத்தந்தை, அருள்பணியாளர்கள் மற்றும் துறவியர், துன்பநேரங்களிலும்கூட தங்களின் அழைப்புக்கேற்ப வாழுமாறு கேட்டுக்கொண்டார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் சில அருள்பணியாளர்களின் பாலியல் தவறான செயல்களால் ஏற்பட்ட துன்பங்களுக்காக வருந்துகிறேன். இது திருஅவையில் பொதுவாக எல்லாத் துறவியருக்கும் அருள்பணியாளர்க்கும் வெட்கத்தைக் கொணர்ந்தது. இத்துன்பங்கள் மற்றும் வேதனை நேரங்களில் நான் உங்களோடு உடன் பயணிக்கிறேன். நன்றியுணர்வும், கடின உழைப்பும் ஆன்மீக வாழ்வின் இரு தூண்கள். நன்றியுள்ள இதயம் இறைவனுக்குத் தானாகவே முன்வந்து பணிபுரியும். இறைவன் நமக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்பதை என்பதை நாம் உணரத் தொடங்கினால், நாம் அவருக்காகவும், பிறருக்காகவும் செய்யும் அனைத்தும் அவரின் மாபெரும் அன்புக்கு விரும்பிப் பதில் அளிப்பதாய் இருக்கும். நம் திறமைகளின் அளவு, நல்ல நிர்வாகம், வெற்றி ஆகியவற்றை வைத்து நம் அப்போஸ்தலிக்கப் பணிகளை அளக்கும் நிலைக்கு உட்படுகிறோம். இவை முக்கியமல்ல என்று சொல்லவில்லை. ஆனால் நம் அப்போஸ்தல வாழ்வின் உண்மையான மதிப்பு இறைவன் கண்களில் எவ்வளவு மதிப்பிடப்படுகின்றதோ அதை வைத்தே உள்ளது. மேலும் அமெரிக்காவில் நற்செய்திப்பணியில் முன்னணியில் நிற்கும் அருள்சகோதரிகளுக்கு மிகச் சிறப்பான நன்றி, உங்களை நான் மிகவும் அன்பு கூருகிறேன். நீங்கள் இல்லாத திருஅவை எப்படி இருக்கும்? அருள்சகோதரிகள் போராடுகிறவர்கள். நீங்கள் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் அமைதியை மட்டும் இழந்து விடாதீர்கள். துணிச்சலும் போராட்ட உள்ளமும் கொண்டவர்கள் நீங்கள். இயேசு கிறிஸ்துவின் பாதையில் நீங்கள் செல்வதில் பிரமாணிக்கமாக இருங்கள். உங்களின் வெற்றி, நீங்கள் தாங்கும் சிலுவையின் அளவை வைத்தே கணிக்கப்படும்.  இவ்வாறு திருத்தந்தை நியுயார்க் புனித பேட்ரிக் பேராலயத்தில் மறையுரையாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.