2015-09-25 16:49:00

இயேசு வீடற்ற மனிதராகவே இவ்வுலகிற்கு வந்தார், திருத்தந்தை


செப்.25,2015. இயேசு வீடற்ற மனிதராகவே இவ்வுலகில் பிறந்தார். தங்குவதற்கு வீடின்றி வாழ்வைத் தொடங்குவது எப்படி இருக்கும் என்பதை இறைமகன் இயேசு அறிந்திருந்தார். வீடு இல்லாமல் இருப்பதை எந்த சமூக அல்லது அறநெறிக் கூற்றால் நியாயப்படுத்த முடியாது. இதற்கு நியாயப்படுத்துதலே கிடையாது. இதற்கு பல அநீதியான சூழல்கள் உள்ளன. ஆயினும், இறைவன் நம்மோடு துன்புறுகிறார், நம் பக்கம் இருந்து நம் துன்பங்களை அனுபவிக்கிறார், அவர் நம்மைக் கைவிடுவதில்லை. ஒவ்வொரு மனிதருடனும் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்ட இயேசு விரும்பினார் என்பதை நாம் அறிவோம். நாம் ஒவ்வொருவரும் அவரின் தோழமை, அவரின் அன்பு மற்றும் அவரின் உதவியை அனுபவிக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். துயருறுவோரோடு, கண்ணீர் சிந்துபவரோடு, எல்லா விதமான அநீதியால் துன்புறுவோரோடு இயேசு தம்மை இருக்கிறார். மேலும், வீடற்ற மற்றும் ஏழை மக்களுக்குத் தொண்டுபுரிபவர்களுக்கு புனித யோசேப் பாதுகாவலராகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார். மரியாவையும், இயேசுவையும் பராமரிப்பதில் புனித யோசேப், அநீதிகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டார். திருக்குடும்பம் பெத்லகேம் நகரை அடைந்தபோது அவர்களுக்குத் தங்குவதற்கு இடமில்லை என்பதைக் கண்டது. அந்நேரம் புனித யோசேப்பின் என்ன நினைத்திருப்பார் என்று கற்பனை செய்து பார்ப்போம். இறைமகனுக்கு எப்படி வீடில்லாமல் போயிற்று?... புனித யோசேப்பின் இத்தகைய எளிய கேள்விகள் ஏழைகளுக்குப் பணிபுரிவோரின் மனங்களில் எதிரொலிக்கின்றன. நாம் ஏன் வீடில்லாமல் இருக்கிறோம்? இந்த ஏழைகளுக்கு ஏன் வீடில்லை? இந்தக் கேள்விகளை நாம் அனைவருமே கேட்க வேண்டும். செபத்தில் முதல் நிலை, 2வது நிலை, ஏழை, செல்வந்தர் என்று யாரும் இல்லை. வீடற்ற நிலையிலும், அத்துன்ப நேரத்திலும் விசுவாசமே புனித யோசேப்புக்கு ஒளியைக் காட்டியது. வாழ்வின் இருளான நேரங்களில் விசுவாசத்தில் ஒளியைக் காண்போம் என்று உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.