2015-09-24 16:29:00

வாஷிங்டன் மாநகரில் திருத்தந்தையின் புதன்கிழமை நிகழ்வுகள்


செப்.24,2015. செப்டம்பர் 22, இச்செவ்வாய் மாலை, கியூபாவிலிருந்து வாஷிங்டன் மாநகர் இராணுவ விமானத்தளத்தில் சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, அவரின் துணைவியார் மிஷேல், இன்னும் திருஅவைத் தலைவர்கள் வரவேற்றனர். அவ்விமானத்தளத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை நாங்கள் ஒவ்வொரு நாளும் அன்புகூருகிறோம் என்று பாடிக்கொண்டே நின்றது. இக்கூட்டத்தினரைக் கையசைத்து வாழ்த்தி அந்நகர் திருப்பீட தூதரகம் சென்றார் திருத்தந்தை. செப்டம்பர் 23, இப்புதனன்று தலைநகர் வாஷிங்டனில் மூன்று முக்கிய பயண நிகழ்வுகளில் கலந்து கொண்டார் திருத்தந்தை.  உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இப்புதன் மாலை 6 மணிக்கு இந்நாளின் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். திருப்பீட தூதரகத்திலிருந்து 4.2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற வெள்ளை மாளிகைக்குக் காரில் புறப்படுவதற்கு முன்னர் அவ்விடத்தில் கூடிநின்ற பள்ளிச் சிறாரிடம் சிறிது நேரம் பேசி அவர்களை மகிழ்வித்தார். அதனால் திருத்தந்தை வெள்ளை மாளிகைக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் காலதாமதம் ஏற்பட்டது. வெள்ளை மாளிகைக்கு முன்னர் திறந்த வெளித் தோட்டத்தில் ஏறத்தாழ இருபதாயிரம் பேர் கூடியிருந்தனர். அவ்விடத்தில் காலை 9.30 மணிக்கு இராணுவ அணிவகுப்பு அரசு மரியாதையுடன் வரவேற்பு நிகழ்வுகள் நடந்தன. இந்நிகழ்வில் முதலில் அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் திருத்தந்தையும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார். இவ்வுரைக்குப் பின்னர், ஒபாமா, அவரின் துணைவியார் ஆகிய இருவரும் திருத்தந்தையை வெள்ளை மாளிகையின் பால்கனிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அனைவரையும் வாழ்த்தினர். பின்னர் ஒபாமா அவர்களுடன் தனியே இருபது நிமிடங்கள் பேசினார் திருத்தந்தை. பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன. இச்சந்திப்பை முடித்து, ஒரு கிலோ மீட்டர் தூரம் திறந்த காரில் திருத்தூதர் புனித மத்தேயு பேராலயம் சென்றார் திருத்தந்தை. அப்பேராலயத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் 450 ஆயர்களுடன் நண்பகல் திருப்புகழ்மாலை செபித்து அவர்களுக்கு நீண்ட உரையொன்றும் ஆற்றினார். திருஅவை மற்றும் சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும், உரையாடலையும் ஒன்றிப்பையும் ஊக்குவிக்கும் மேய்ப்பர்களாக இருக்குமாறு ஆயர்களைக் கேட்டுக்கொண்டார். உலகின் இரண்டாவது பெரிய ஆயர் பேரவையாகிய அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையினரைச் சந்தித்த பின்னர் திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்புதனன்று Yom Kippur பெருவிழாவைச் சிறப்பித்த உலக யூதர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை. யூதர்கள் தங்களின் மிகவும் புனிதம் நிறைந்த இந்த விழாவை ஏறக்குறைய 25 மணி நேரம் நோன்பு மற்றும் செபத்தில் செலவழிப்பார்கள். ஏறக்குறைய நாள் முழுவதும் தொழுகைக்கூடத்திலே இருப்பார்கள். இப்புதன் மாலையில் அருளாளர் ஹூனிப்பெரோ செர்ரா அவர்களைப் புனிதராக உயர்த்தும் திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலிக்குச் சென்ற வழியில், லாஸ் ஆஞ்சலெஸ் நகரைச் சேர்ந்த  ஐந்து வயது Sophie Cruz என்ற சிறுமி, காவல்துறை பாதுகாப்பையும் ஒதுக்கிவிட்டு திருத்தந்தையிடம் ஓடிச் சென்றாள். திருத்தந்தையும் தான் சென்ற காரை நிறுத்தச் சொல்லி அச்சிறுமியிடமிருந்து கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். தானும் தனது நண்பர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும், பிரிந்து வாழும் பெற்றோர் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கைகள், அந்தக் குடியேற்றதாரச் சிறுமியின் கடிதத்தில் இருந்தது.  

இத்திருப்பலியை நிறைவு செய்து அவ்விடத்திற்கு அருகிலுள்ள புனித திருத்தந்தை 2ம் யோவான் பால் குருத்துவக் கல்லூரிக்கும் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இப்புதனன்று ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை இல்லம் சென்று அச்சகோதரிகளுடன் உரையாடி அவர்களை ஊக்கப்படுத்தி தனது ஆதரவையும் தெரிவித்தார். 102 வயது அருள்சகோதரி Marie Mathilde அவர்களைக் கைகுலுக்கி ஆசிர்வதித்தார் திருத்தந்தை. இச்சகோதரிகளுக்கு வியப்பையும் மகிழ்வையும் அளித்த இச்சந்திப்பு, இப்பயணத் திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

நம்பிக்கையின் திருத்தந்தையாக நோக்கப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆவல்கள் நிறைவேற செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.