2015-09-24 15:22:00

புனிதர் பட்ட திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை


செப்.24,2015. அன்பு சகோதர, சகோதரிகளே, "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்." நம் வாழ்வில் தாக்கத்தை உருவாக்கும் வார்த்தைகள், இவை. வாழ்வில் நிறைவைக் காணவிழையும் நம் அனைவரின் உள்ளத்து உணர்வுகளை, புனித பவுலின் வார்த்தைகள் எதிரொலிக்கின்றன.

அதேவேளையில், மகிழ்வுக்கு எதிராக, ஒவ்வொருநாள் வாழ்விலும் நாம் சந்திக்கும் போராட்டங்களையும் நாம் அறிவோம். இவற்றால் மனம் தளர்ந்து, வாழப் போகிறோமா? நற்செய்தியின் மகிழ்வு நம் வாழ்வில் ஆழமாய் வேரூன்ற நாம் செய்யவேண்டியது என்ன?

இயேசு இதற்குப் பதில் சொல்கிறார். தன் சீடர்களுக்குச் சொன்னதுபோல், நம்மிடமும் இப்போது சொல்கிறார்: செல்லுங்கள்! பறைசாற்றுங்கள்!

எது எளிதாக நம்மை வந்தடைகிறதோ, அதைக் கொண்டு, நமக்குள் நாமே திருப்தியடைவதற்கு இவ்வுலகம் சொல்லித் தருகிறது. ஆனால், நமக்கு அடுத்தவர் தேவை, அவர்களோடு சேர்ந்து இவ்வுலகிற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும் என்ற உண்மையில் நாம் உறுதிகொள்ள வேண்டும். இந்த உண்மையைப் பறைசாற்ற, உலகெங்கும் நாம் செல்லவேண்டும்.

இயேசு, தன் சீடர்களை உலகெங்கும் அனுப்பினார். அவரது நற்செய்தியை, யார், யார் கேட்கவேண்டும், யார், யார் கேட்கக்கூடாது என்ற பாகுபாடுகளை அவர் தரவில்லை. 

அனைவருக்கும் நற்செய்தியைப் பறைசாற்றச் செல்லுங்கள். தந்தையின் கருணை நிறைந்த அணைப்பை அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். துன்பத்தாலும், தோல்வியாலும் துவண்டிருக்கும் மக்களிடம் செல்லுங்கள். தவறுகள், மாயைகள் நம் வாழ்வை இறுதியாக நிர்ணயிக்காது என்பதை எடுத்துச் சொல்லச் செல்லுங்கள். காயங்களை குணமாக்கி, இதயங்களை நலமாக்கும் தைலத்தை எடுத்துச் செல்லுங்கள்.

மறைபரப்புப் பணி என்பது, குறையேதும் இன்றி, நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அல்ல. கடவுளின் கருணையை உணர்வதால் பிறக்கும் பணி அது.

போராட்டம், வன்முறை, அநீதி என்ற தூசிகள் நிறைந்த பாதையில்தான், இறைவனின் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பாதையைத் தவறவிடுவோம் என்பது இம்மக்களின் அச்சம் அல்ல, மாறாக, தங்கள் பாதுகாப்பை மட்டுமே கெட்டியாகப் பிடித்தவண்ணம், சுயநலத்தில் உறைந்துபோவதே, இவர்களின் அச்சம்.

எனவே, இயேசுவின் வாழ்வை அனைவருக்கும் வழங்க, நாம் வெளியேறிச் செல்வோம்.

நற்செய்திக்கு நல்லதொரு சாட்சியாக வாழ்ந்த ஒருவரை நினைவுகூர இங்கு வந்துள்ளோம் - அவர்தான் அருள்பணி ஹூனிப்பெரோ செர்ரா.  தான் சந்தித்த அனைவரிலும் கடவுளின் அன்பை இவர் பிறப்பெடுக்கச் செய்தார். இந்நாட்டு பழங்குடியினர், மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டபோது, அவர்களின் உரிமைகளைக் காத்தார்.

"எப்போதும் முன்னேறிச் செல்வது" என்பது, அருள்பணி செர்ரா அவர்களின் வாழ்வை உந்தித் தள்ளிய விருதுவாக்கு. சகோதர, சகோதரிகள் காத்திருக்கின்றனர் என்பதை உணர்ந்த அவர், எப்போதும் முன்னேறிச் சென்றார். அவரைப்போல் இன்று நாமும் துணிவுடன் சொல்வோம்! முன்னேறிச் செல்வோம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.