2015-09-24 15:05:00

திருத்தந்தை : நம்மைப் படைத்ததற்காக கடவுள் வருந்துவதில்லை


செப்.24,2015. அன்பு அரசுத்தலைவரே, குடியேற்றதாரர் குடும்பம் ஒன்றின் மகனாகிய நான், குடியேற்றதாரர்களால் பெரும்பாலும் கட்டியெழுப்பப்பட்ட இந்நாட்டின் விருந்தாளியாக வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அமெரிக்க மக்களின் எதிர்பார்ப்புகளையும், கனவுகளையும் இந்நாட்களில், பகிர்ந்துகொள்வதை எதிர்நோக்கியுள்ளேன். இந்நாட்டின் குடிமக்களுடன் இணைந்து, அமெரிக்க கத்தோலிக்கர்கள், பொறுமை, சகிப்புத்தன்மை, அனைவரையும் வரவேற்கும் இயல்பு ஆகிய அனைத்து பண்புகளையும் கொண்டவர்களாக வாழ்கின்றனர். தனியார் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அநீதியான பாகுபாட்டு நிலைகளை வெறுத்து ஒதுக்குபவர்களாக செயல்படுவதிலும், தங்களை அர்ப்பணித்து சேவையாற்றுகின்றனர். மத விடுதலையை உள்ளடக்கிய நீதியும், ஒழுங்கமைவும் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்பும் அக்கறையுடன், அனைத்து நல்மனம் கொண்டோருடன் இணைந்து செயல்படுகின்றனர்.

அரசுத்தலைவரே, காற்று மாசுக்கேட்டைத் தடுப்பதற்கு நீங்கள் முன்வைத்துள்ள திட்டம், மிகவும் ஊக்கம் தருவதாக உள்ளது. தட்ப வெப்ப நிலை மாற்றம் என்ற பிரச்சனை, வருங்காலத் தலைமுறையினரைச் சார்ந்தது என்று நாம் கை கழுவிவிட்டுச் செல்ல முடியாது. நம் பொது இல்லமான இவ்வுலகம், வரலாற்றில் மிகப்பெரும் சிக்கலானச் சூழலில் உள்ளது. மாற்றங்களைக் கொணர்வதற்கான நேரம் இதுவே. நம் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் வருங்காலத்தை மட்டும் எண்ணாமல், இன்றைய சமூக அமைப்பு முறைகளால் பலனடையாமல் வாழும் பல இலட்சக்கணக்கான மக்களையும் மனதில் கொண்டு, நம் கடமைகளை உணர்ந்து செயல்படவேண்டும். மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், 'நம்முடைய வாக்குறுதிகளில் நாம் தவறிவிட்டொம். அதனைச் சரிசெய்வதற்கான நேரம் இதுவே'.

கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை. அவருடைய அன்பு திட்டத்தை அவர் உதறுவதில்லை, அல்லது, நம்மைப் படைத்ததற்காக அவர் வருந்துவதுமில்லை. நமக்கென ஒரு பொது இல்லத்தை கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து உழைக்க, மனித குலத்திற்கு திறமை உள்ளது. இந்த உறுதிப்பாட்டால் தூண்டப்படும் நாம், நம் பொது இல்லம் குறித்த கடமையுணர்வில் நம்மை அர்ப்பணிப்போம். முறிந்த உறவுகளை புதுப்பிப்பதற்கு அண்மையில் எடுக்கப்பட்ட முயற்சிகளும், புதிய கதவுகளைத் திறப்பதற்கான முயற்சிகளும், ஒப்புரவு, நீதி மற்றும் விடுதலை நோக்கிய பாதையில் நம்பிக்கை தரும் படிகள். தன் அனைத்துக் குழந்தைகள் மீதும் கடவுள் விரும்பும், வளம் மற்றும் அமைதியின் ஆசீரை, இவர்கள் அனைவரும் கண்டுணர உதவும் வளர்ச்சித் திட்டங்களுக்கும், ஏழை, எளியோரை பாதுகாக்கவும், அனைத்துலக சமுதாயம் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்நாட்டின் நல்மனம் கொண்ட அனைவரும் ஊக்கமளிப்பார்களாக. அமெரிக்க ஐக்கிய நாட்டை, கடவுள் ஆசீர்வதிப்பாராக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.