2015-09-24 16:37:00

அரசுத்தலைவர் ஒபாமா திருத்தந்தைக்கு வழங்கிய வரவேற்புரை


செப்.24,2015. வெள்ளை மாளிகையில் திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வரவேற்பில் அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் முதலில் திருத்தந்தையை  வரவேற்றுப் பேசினார். திருத்தந்தையே, அனைத்து அமெரிக்கர்களின் பெயரால் தங்களை வரவேற்கிறேன். அமெரிக்கக் கண்டத்தின் முதல் திருத்தந்தை, டுவிட்டர் வழியாகத் திருமடலைப் பகிர்ந்துகொண்ட முதல் திருத்தந்தை, என, தங்களின் பல முதன்மைகளை இன்று சிறப்பிக்கிறோம். தங்களின் அன்பு மற்றும் நம்பிக்கைச் செய்தி எங்கள் நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் எண்ணற்ற மக்களுக்குத் தூண்டுதலாக உள்ளது. கத்தோலிக்கரும், கத்தோலிக்கர் அல்லாதவரும் தங்கள் வாழ்வில் ஏழைகள் மீது அக்கறை காட்டுமாறு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். இறைவனின் கண்முன்பாக தனியாள்கள் மற்றும் சமுதாயங்களின் செல்வமோ, அதிகாரமோ மதிப்புப் பெறாது, ஆனால், நாம் அனைவரும் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டவர்கள் என்ற உணர்வில் ஒவ்வொரு மனிதரும் மாண்புடன் வாழ்வதை உறுதி செய்யவும், ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தவும் விவிலியம் விடுக்கும்  அழைப்புக்கு நாம் எவ்வாறு செவிமடுக்கிறோம் என்பதிலே நாம் மதிப்புப் பெறுகிறோம் என்று தாங்கள் எங்களுக்கு நினைவுப்படுத்துகிறீர்கள். கியூப மக்களோடு எங்களின் புதிய ஆரம்பத்திற்குத் தொடக்கமுதல் வழங்கிவரும் மதிப்பிட முடியாத ஆதரவுக்கு நன்றி. உலகில் போர்கள் நிறுத்தப்படவும், சுற்றுச்சூழல், சமய சுதந்திரம், பல்சமய சுதந்திரம் காக்கப்படவும் வேண்டுமென்ற தங்களின் அழைப்பை நானும் ஆதரிக்கிறேன். ஆயினும் உலகெங்கும், கிறிஸ்தவர்கள் உட்பட இறைவனின் குழந்தைகள் தங்களின் விசுவாசத்திற்காக நசுக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். நம் வருங்காலத் தலைமுறைகளுக்காக நம் மதிப்புமிக்க உலகைக் காக்க வேண்டும் என்று உலகத் தலைவர்களுக்குத் தாங்கள் விடுத்துள்ள அழைப்புக்கும் ஆதரவளிக்கிறேன். தங்களின் நம்பிக்கை எனும் கொடைக்கு நன்றி. தங்களை மிகுந்த மகிழ்வோடும் நன்றியோடும் இந்நாட்டிற்கு வரவேற்கிறேன் என்று அரசுத்தலைவர் ஒபாமா அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.