2015-09-24 15:13:00

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை


செப்.24,2015. என் சகோதர ஆயர்களே, பரந்து விரிந்த இந்த நாட்டின் பல பகுதிகளில் பணியாற்றும் நீங்கள், என் அன்பை உங்கள் மக்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்லுங்கள். எங்கெங்கு இயேசுவின் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் திருத்தந்தையின் குரலும் இணைந்து, 'அவரே மீட்பர்' என்று சொல்வதை, மக்கள் கேட்கட்டும். கண்ணீரைத் துடைக்க, உடைந்த மனதைத் தேற்ற, பாதை தவறியவருக்கு நல்வழிகாட்ட எப்போதெல்லாம் கரமொன்று நீளுகின்றதோ, அப்போதெல்லாம், திருத்தந்தையும் உங்கள் அருகில் இருந்து, உங்களுக்கு ஆதரவு தருகிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி என்பதே நான் உங்களுக்குக் கூறவிழையும் முதல் எண்ணம். விவிலியத்தின் சக்தியை இந்தக் கண்டத்தில் உணர்த்த, தாராள மனதுடன் முன்வந்துள்ள அனைவருக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மறைபரப்புப் பணியாளர்களால் கிறிஸ்து அறிவிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து வந்தவன் என்பதால், உங்களுடன் என்னையும் இணைத்துக்கொள்ள முடிகிறது.

அண்மைய நாட்களில், இந்நாட்டின் திருஅவை சந்தித்துவரும் பல கடினமானச் சூழல்களில், நீங்கள் அனைவரும் காட்டிவரும் துணிவை நான் அறிவேன்.

நான் ஒரு தனி மனிதனாக உங்களிடம் பேச வரவில்லை. உரோமையின் ஆயர் என்ற முறையில், என் முன்னோர் பலர் கூறியுள்ள கருத்துக்களின் தொடர்ச்சியாக நான் உங்களிடம் பேச வந்துள்ளேன். அமெரிக்க புரட்சியைத் தொடர்ந்து, பால்டிமோர் (Baltimore) எனுமிடத்தில், மறைமாவட்டம் துவங்கப்பட்ட நேரத்திலிருந்து, உரோம் திருஅவை உங்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளது.

நீங்கள் என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்று அறிவுரை கூற நான் வரவில்லை, ஒரு மேய்ப்பராக நாம் செய்யக்கூடியவற்றை குறித்து, என் மனதில் எழும் எண்ணங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்.

மக்களின் மேய்ப்பர்கள் என்ற பணி மிக அதிகமான மகிழ்வைத் தருகிறது. இந்த மகிழ்வை யாரும் நம்மிடமிருந்து பறித்துவிட அனுமதிக்கக்கூடாது. மிகவும் சிக்கலான கொள்கைகளை மறையுரையாக எடுத்துச் சொல்வதற்குப் பதில், கிறிஸ்துவை மகிழ்வுடன் எடுத்துச் சொல்வதே நம் பணி. நாம் மறையுரையாற்றும்போது, 'நம் அனைவருக்கும்' என்ற பாணியில் பேசுவதை மக்கள் கேட்கவேண்டும்.

தங்கள் சுயநலத்தை மையப்படுத்தாமல், தங்கள் மந்தையில் உள்ளவர்களை மையப்படுத்தி, அவர்கள், இறைவனையும், இயேசுவையும் சுவைத்து உணரச் செய்பவர்களே, உண்மையான ஆயர்கள்.

தங்கள் நலன்களில் மட்டும் கவனம் செலுத்தும் வண்ணம், கண்களை கீழ்நோக்கித் திருப்பாமல், தூரத்துத் தொடுவானங்களைப் பார்த்து, அங்கு இறைவன் நமக்குத் திறந்துவிடும் பாதைகளை நோக்குபவர்களே, உண்மையான ஆயர்கள்.

"நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்." (மத்தேயு 11:28-30) என்று ஆண்டவர் கூறும் வார்த்தைகள், எப்போதும் நம் உள்ளங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

நெருங்கிவரும் கருணையின் புனித ஆண்டு, அளவற்ற ஆழம் கொண்டுள்ள கடவுளின் இதயத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லட்டும். நம்மிடமுள்ள வேற்றுமைகளைக் களைந்து, ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த, இந்த ஆண்டு உதவி செய்யட்டும்.

மக்களை ஒருங்கிணைக்கும் பணி இந்த நாட்டிற்கு மிகவும் அவசியம். கலாச்சாரம், அரசியல், ஆன்மீகம், அறிவியல், தொழில்நுட்பம் என்ற பல துறைகளில் வெகுவாக வேறுபட்டிருக்கும் இந்த நாட்டு மக்களை அமைதியில் ஒருங்கிணைப்பது, மிகவும் சவாலான ஒரு பணி.

கருக்கலைப்பினால் பாதிக்கப்படும் மாசற்ற உயிர்கள், பசியினாலும், குண்டுகளின் தாக்குதல்களாலும் இறக்கும் குழந்தைகள், நல்லதொரு எதிர்காலத்தைத் தேடி, வரும் வழியில், கடலில் மூழ்கும் மனிதர்கள், பாரங்கள் என்று கருதப்படும் வயது முதிர்ந்தோர் மற்றும், நோயுற்றோர், போரினாலும், போதைப் பொருள்களாலும் துன்புறுவோர், மனிதரின் அபகரிக்கும் குணத்தால் அழிந்துவரும் இயற்கை இவை அனைத்திலும் இறைவன் வழங்கிவரும் கொடைகள், ஆபத்தைச் சந்தித்து வருகின்றன.

இத்தகையச் சூழலில், நாம் சொல்லும் உண்மைகளை ஏற்பதற்கு சமுதாயம் எதிர்ப்பு தெரிவித்தாலும், உண்மைகளை பறைசாற்ற நாம் தயங்கக்கூடாது.

இத்தகையப் பணியைச் செய்வதற்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு தலத்திருஅவை, ஓர் எளிய இல்லமாக இருந்து, தன் அன்பால், அனைவரையும் இவ்வில்லத்திற்குள் அழைத்து வரவேண்டும்.

என் எண்ணங்களை நிறைவு செய்வதற்கு முன், இரு பரிந்துரைகளை முன்வைக்க அனுமதியுங்கள். ஆயர்கள் என்ற பணியில், தந்தைக்குரிய பாசத்தை வெளிப்படுத்துங்கள். குறிப்பாக, உங்கள் அருள் பணியாளர்கள், இந்த பாசத்தை உணரட்டும். அவர்கள், மேற்பார்வையாளர்களாக, மேலாளர்களாகப் பணியாற்றுவதற்குப் பதில், மேய்ப்பராகப் பணியாற்ற உதவி செய்யுங்கள்.

என் இரண்டாவது பரிந்துரை, குடியேற்றதாரரைப் பற்றியது. இலத்தீன் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவன் என்ற முறையில், தென் அமெரிக்காவிலிருந்து இங்கு குடியேறிவரும் மக்களுக்கு நீங்கள் ஆற்றிவரும் பணிகளை நான் நன்கு அறிவேன். அவர்களை வரவேற்கத் தயங்கவேண்டாம். அவர்களும், இந்நாட்டின் தலத்திருஅவைக்கு பல வழிகளில் வளர்ச்சியை தரக்கூடியவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு உள்ளார்ந்த அன்புடன் வரவேற்பு அளியுங்கள்.

இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, மரியன்னை உங்களைக் கண்காணிப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.