2015-09-23 16:52:00

வாஷிங்டனில் திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.23,2015. செப்டம்பர் 23, இப்புதன், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தின் 5வது நாள். உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் இப்புதன் மாலை 6 மணிக்கு இந்நாளின் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். வாஷிங்டன் திருப்பீட தூதரகத்திலிருந்து 4.2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற வெள்ளை மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. அங்கு அரசு வரவேற்பு நிகழ்வுகள் நடந்தன. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவரின் அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட இருப்பிடமான வெள்ளை மாளிகை, 1792ம் ஆண்டில் அரசுத்தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் அவர்களால் கட்டத் தொடங்கப்பட்டு அவரின் இறப்புக்குப் பின்னர் 1800ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இம்மாளிகை 1814ம் ஆண்டில் பிரித்தானியப் படைகளால் தீ வைக்கப்பட்டது. பின்னர் 1929ம் ஆண்டில் மேற்கத்தியர்களால் மீண்டும் சேதமாக்கப்பட்டது. ஆறு அடுக்குகளைக் கொண்டுள்ள தற்போதைய வெள்ளை மாளிகையில் 132 அறைகளும், 3 லிப்டுகளும், 8 மாடிப்படிகள் பாதைகளும் உள்ளன. முன்னரே பதிவு செய்யப்பட்ட அனுமதியுடன் பார்வையாளர்கள் இதனைப் பார்வையிடுகின்றனர். இப்புதனன்று வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற வரவேற்பில் அரசுத்தலைவரின் உரைக்குப் பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார். அனைத்து அமெரிக்கர்கள் பெயரால் வழங்கப்பட்ட இனிய வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து, ஒரு குடியேற்றதாரக் குடும்பத்தின் மகன் என்ற முறையில் இந்நாட்டில் தான் ஒரு விருந்தாளியாக இருப்பதில் மகிழ்வதாகத் தெரிவித்தார் திருத்தந்தை. இறைவன் அமெரிக்காவை ஆசிர்வதிப்பாராக என்று உரையை நிறைவு செய்தார். இந்நிகழ்வுக்குப் பின்னர் வாஷிங்டன் திருத்தூதர் புனித மத்தேயு பேராலயம் சென்று ஆயர்களைச் சந்திப்பது, அருளாளர் ஹூனிப்பெரோ சேரா அவர்களைப் புனிதராக உயர்த்தும் திருப்பலி போன்றவை, திருத்தந்தையின் இப்புதன் திருத்தூதுப் பயணத் திட்டத்தில் உள்ளன. திருத்தந்தையின் அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான திருத்தூதுப் பயணம் சிறப்புற அமையச் செபிப்போம். இப்பயணத்தை நிறைவுசெய்து செப்டம்பர் 28 திங்கள் காலை 10 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.