2015-09-23 16:45:00

திருத்தந்தை பிரான்சிஸ் - தாத்தா பாட்டிகளைப் புறக்கணியாதீர்கள்


செப்.23,2015. சந்தியாகோ தெ கியூபா நகர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் மாடிக்குச் சென்று அந்நகரை ஆசிர்வதித்து கியூப மக்களின் இனிய வரவேற்புக்கு நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கியூப மக்கள், அன்பும் பாசமும் கொண்டவர்கள். நட்புடன் பழகுபவர்கள். இந்நாட்டில் ஒருவரை தனது வீடுபோல் உணரச் செய்பவர்கள். நாம் கடந்ததைத் திரும்பிப் பார்த்தால் நம்பிக்கை தெரிகின்றது. இந்நம்பிக்கையைக் கொண்ர்ந்தவர்கள் தாத்தா பாட்டிகள். அவர்களுக்குத் தலை வணங்குவோம். தாத்தா பாட்டிகளைப் புறக்கணியாதீர்கள். கியூப நாட்டின் வாழ்வை முன்னோக்கிப் பார்க்கும்போது சிறாரும் இளையோரும் நம்முன் தெரிகின்றார்கள். இவர்களே நம் வலிமை. தாத்தா பாட்டிகளையும், சிறாரையும் இளையோரையும் பராமரிக்கும் நகரத்திற்கு வெற்றி நிச்சயம். இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக. நான் உங்களுக்கு ஆசிர் கொடுக்கிறேன். அதற்கு நீங்களும் எனக்குப் பதிலுக்கு ஏதாவது தர வேண்டும். அதுதான் செபம். எனக்காகச் செபியுங்கள் என்று கேட்கிறேன் என்று சொல்லி, சந்தியாகோ தெ கியூபா நகரிலிருந்து கியூப மக்கள் அனைவரையும் ஆசிர்வதித்து அவர்களுக்காக இறைவனிடம் செபித்து விமான நிலையம் சென்று அரசு மரியாதையுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் கியூப நாட்டிற்கான திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது. அப்போது இந்திய இலங்கை நேரம் இச்செவ்வாய் இரவு பத்து மணியாகும்.

கியூபாவின் சந்தியாகோ நகரிலிருந்து 2,103 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைநகர் வாஷிங்டனுக்கு ஆலித்தாலியா விமானத்தில் 3 மணி 30 நிமிடங்கள் பயணம் செய்து வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை வாமானத்தளத்தை அடைந்த போது இச்செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை 4 மணியாக இருந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, அவரின் குடும்பத்தினர் மற்றும் திருஅவைத் தலைவர்கள் திருத்தந்தையை விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், இஸ்பானிய மொழி பேசும் மக்கள் கூட்டமும், வாஷிங்டன் மாவட்டப் பள்ளிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பள்ளிச் சிறாரும் விமான நிலையத்தில் திருத்தந்தையை வரவேற்றனர். இவ்வரவேற்பைப் பெற்று அங்கிருந்து 26 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற திருப்பீட தூதரகம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தப் பயணத்தில் திருத்தந்தை சென்ற சிறிய எளிமையான பியட் வாகனத்திற்கு முன்னும் பின்னும் பல ஆடம்பர வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன. திருத்தந்தை சென்ற வாகனத்தின் கறுப்புக் கண்ணாடி மூடப்பட்டிருந்தது. ஆனால் திருத்தந்தை அதைத் திறந்து சாலையில் இரு பக்கங்களிலும் நின்று கொண்டிருந்த ஏராளமான மக்களைக் கையசைத்து வாழ்த்தினார். திருத்தந்தை, வாஷிங்டன் திருப்பீட தூதரகம் சென்றதுடன் அவரின் இச்செவ்வாய் தின நிகழ்வுகள் முற்றுப் பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.