2015-09-23 16:39:00

குடும்பங்கள் பிரச்சனைக்குரியவை அல்ல, திருத்தந்தை பிரான்சிஸ்


செப்.23,2015. கியூபா நாட்டுக் குடும்பங்களுக்கென தான் தயாரித்து வைத்திருந்த உரையையும் வழங்கினார் திருத்தந்தை. புவனோஸ் ஐரெஸ் உயர்மறைமாவட்டத்தில் நான் பணியாற்றியபோது பல குடும்பத்தினர் என்னிடம் தங்களின் நிலைகளை விளக்கியுள்ளனர். அன்றாட வேலை முடிந்து, பிள்ளைகள் தங்களின் வீட்டுப்பாடங்களை முடித்த பின்னர் பல குடும்பங்கள் ஏறக்குறைய இரவு உணவுநேரம் மட்டுமே ஒன்று கூடுவதாகச் சொல்லியுள்ளனர். இந்த நேரம், குடும்பத்தின் வாழ்வில் முக்கியமான, சிறப்பான நேரமாகும். இந்நேரங்களில் ஒருவர் வீட்டிற்குக் களைப்பாகத் திரும்பியிருப்பார் அல்லது அந்நேரங்களில் கடும் வாக்குவாதங்கள் எழும்பும். இயேசு இவ்வேளைகளில் இறைவனின் அன்பை நமக்குக் காட்டுகிறார். வீடுகளில் குழந்தைகளும், பெற்றோரும் வாழ்வை வரவேற்கவும், வாழ்வின் நன்மைகளைப் பாராட்டவும், ஒருவர் ஒருவரைச் சார்ந்து வாழவும் கற்றுக்கொள்கின்றனர். இதனாலே கிறிஸ்தவ சமூகம், குடும்பங்களைக் இல்லத் திருஅவைகள் என அழைக்கிறது. இல்லத்தின் மனம்நிறை அன்பில், விசுவாசம் அங்கு நிரப்பப்பட்டு, ஒவ்வொரு மூலையிலும் ஒளியேற்றப்படுகிறது. இதில் சமூகமும் கட்டியெழுப்பப்படுகின்றது. இல்லத்தில் நாம் மன்னிப்பை அனுபவிக்கிறோம். தொடர்ந்து மன்னிப்புக் கேட்டு வளர்கிறோம். குடும்ப வாழ்வில் ஒவ்வொருவரும் பிறருக்குத் தங்களால் எவ்வளவு சிறப்பாக உதவ முடியுமோ அவ்வளவுக்கு உதவுகிறோம். தோழமையிலும், உடன்பிறப்பு உணர்விலும் வளர்கிறோம். கிறிஸ்து தமது பொது வாழ்வில் பல வேளைகளில் உணவு மற்றும் விருந்துகளில் தம்மை வெளிப்படுத்தினார். பலதரப்பட்ட மக்களோடு உணவருந்தினார். பல்வேறு வீடுகளுக்கு அவர் சென்றார். கிறிஸ்து, நம் மத்தியில் தமது பிரசன்னத்தைக் காட்டும் இடமாக, குடும்ப வாழ்வை சிறப்பான தருணமாகத் தேர்ந்தெடுத்தார். திருநற்கருணை, நம் குடும்பங்களுக்கு வாழ்வின் நல்உணவாக உள்ளது. இயேசு தம் பொது வாழ்வை திருமண விருந்திலே தொடங்கினார். குடும்ப வாழ்வில் திருமணங்கள் முக்கியமான நேரங்களாகும். தாத்தா பாட்டிகளும், பெற்றோரும் தாங்கள் வாழ்வில் விதைத்ததின் கனிகளை அறுவடை செய்யும் நேரங்கள் அவை. குழந்தைகள் வளர்வதைப் பார்க்கும்போது நம் இதயங்கள் மகிழ்கின்றன. குடும்பமின்றி, குடும்பத்தின் அரவணைப்பின்றி வாழ்வு வெறுமையாக வளரும். குடும்பங்கள் ஆசிர்வாதங்களாகும். குடும்பத்தை பிரச்சனையாகப் பார்க்கத் தொடங்கும்போது நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களாகி விடுகிறீர்கள். நவீன உலகின் பிரச்சனைகளுக்கு குடும்பங்கள் நல்மருந்தாகும். சமுதாயத்தில் அடிக்கடி காணப்படும் தனிமை மற்றும் பிரிவினயைக் குடும்பங்களால் உடைத்தெறிய முடியும். இன்னும் சில நாள்களில் உலக குடும்பங்கள் மாநாட்டில் உலக குடும்பங்களுடன் இணையவுள்ளேன். குடும்பங்கள் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றமும் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுகளுக்காகச் செபியுங்கள். நான் உங்கள் செபங்களை நம்பியுள்ளேன். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு சந்தியாகோ தெ கியூபா நகர் விண்ணேற்பு அன்னை மரியா பேராலயத்தில் குடும்பங்களுக்கு உரை நிகழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.