2015-09-23 17:04:00

கியூபாவில் திருத்தூதுப் பயணம் - நிறைவு


செப்.23,2015. செப்டம்பர் 19, கடந்த சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில் கியூபா நாட்டுத் தலைநகர் ஹவானா சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் ஹவானா, வோல்கின், சந்தியாகோ தெ கியூபா ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் திருத்தூதுப் பயணத் திட்டங்களை நிறைவேற்றினார். கியூபா நாட்டுக்கான திருத்தூதுப் பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக, இச்செவ்வாய் உள்ளூர் நேரம் முற்பகல் 11 மணிக்கு சந்தியாகோ தெ கியூபா நகர் விண்ணேற்பு அன்னை மரியா பேராலயத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சந்தித்தார். வயதானவர்கள், இளையவர்கள், சிறார் என பலதரப்பட்ட வயதினர் பேராலயத்தில் அமர்ந்திருந்தனர். இவர்களைத் தவிர, பேராலயத்திற்கு வெளியேயும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் கூடியிருந்து கைகளில் பாப்பிறைக் கொடிகளை ஏந்திக்கொண்டு திருத்தந்தையை வாழ்த்தி அவரைப் பார்த்து ஆசிர் பெற்றனர். இச்சந்திப்பில் முதலில் சந்தியாகோ உயர்மறைமாவட்டப் பேராயர் Garcia Ibanez அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் கியூபா நாட்டு ஓர் இளம் தாயும் தந்தையும் தனது மூன்று குழந்தைகளுடன் திருத்தந்தையின் அருகில் நின்று, தங்கள் வாழ்வின் நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்தப் பகிர்தலைக் கேட்ட பின்னர், திருத்தந்தையும், இக்குடும்பங்களுக்கென தான் தயாரித்து வைத்திருந்த உரையை முதலில் வழங்காமல் அந்நேரத்தில் எழுந்த தனது உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டார். அப்பேராலயத்தில் அமர்ந்திருந்த மற்றும் தொலைக்காட்சி அல்லது வானொலி வழியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கருவுற்றிருக்கும் பெண்களைத் தங்களின் வயிற்றில் கைகளை வைக்குமாறு சொல்லி அக்குழந்தைகளுக்குத் தனது ஆசிரை அளிப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.