2015-09-22 16:20:00

வோல்கின் நகர் திருச்சிலுவைக் குன்று


செப்.22,2015. வோல்கின் நகர் ஆயர் இல்லத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற லோமா தெ லா குரூஸ் என்ற இடத்திற்கு மாலை 3.30 மணிக்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை. வோல்கின் நகருக்கு வடக்கே 261 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிலுவைக் குன்றே லோமா தெ லா குரூஸ் என்பதாகும். இக்குன்றில் முதலில் 1790ம் ஆண்டில் வோல்கின் பிரான்சிஸ்கன் சபைத் தலைவர் Francisco Antonio de Alegria என்பவரால் சிலுவை நாட்டப்பட்டது. வெள்ளத்தில் இது அழிந்ததால், மீண்டும் 1990களில் இக்குன்றில் பெரிய சிலுவை நாட்டப்பட்டது. இக்குன்றிலுள்ள ஐந்து மீட்டர் நீளமான சிலுவை அமைந்திருக்கும் இடத்தை அடைவதற்கு 458 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சிலுவை அடியில் நின்று வோல்கின் நகரை ஆசிர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வை முடித்து வோல்கின் விமான நிலையம் சென்று சந்தியாகோ தெ கியூபா நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். வோல்கின் நகரில் புனித இசிதோர் பேராலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 3 டன் எடையுள்ள புனித திருத்தந்தை 2ம் யோவான் பால் உருவத்தையும் பார்வையிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். வோல்கின், கியூபப் புரட்சித் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோ மற்றும் அவரின் தம்பி ராவுல் காஸ்ட்ரோ பிறந்த நகரமாகும்.

சந்தியாகோ நகர் Antonio Maceo பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தையை நகர அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அவ்விமான நிலையத்திலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற புனித பெரிய பேசில் பாப்பிறை குருத்துவக் கல்லூரிக்குச் சென்றார் திருத்தந்தை. 1722ம் ஆண்டில் கட்டப்பட்ட மிகவும் தொன்மையான இக்குருத்துவக் கல்லூரியில் கியூபா ஆயர்களைச் சந்தித்தார். பின்னர் அங்கிருந்து கோப்ரே பிறரன்பு அன்னை மரியா தேசிய திருத்தலம் சென்றார் திருத்தந்தை. திருத்தந்தையோடு பயணம் செய்யும் வத்திக்கான் வானொலி இயக்குனர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்தக் கியூபத் திருத்தூதுப் பயணம் பற்றிக் கருத்து தெரிவித்த போது, கியூப மக்களை நம்பிக்கை வாழ்வில், துன்பங்களின் மத்தியிலும் நம்பிக்கையுடன் இருப்பதற்குத் திருத்தந்தை ஊக்கப்படுத்தியுள்ளார், கியூப மக்களின் மன மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், என்று கூறினார். கியூ மக்களுக்கு நன்றி, எனது இதயத்திலிருந்து நன்றி என்ற டுவிட்டர் செய்தியையும் திருத்தந்தை இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளார். நாமும் கியூப மக்களை கோப்ரே பிறரன்பு மரியிடம் அர்ப்பணிப்போம். அவ்வன்னை நம் அனைவரையும் பாதுகாப்பாராக.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.