2015-09-22 16:24:00

கோப்ரே பிறரன்பு அன்னை மரியா திருத்தலத்தில் செபம்


செப்.22,2015. கோப்ரே பிறரன்பு அன்னை மரியா திருத்தலம், கியூபாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வோடு மிக நெருங்கிய முறையில் தொடர்பு கொண்டது. 1612ம் ஆண்டில் ஹூவான், ரொட்ரிக்கோ தெ ஹோயோஸ் ஆகிய இரு பூர்வீக இனத்தவர், ஹூவான் மொரேனோ என்ற அடிமை ஆகிய மூன்று மீனவர்களும் நிப்பே வளைகுடாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மிதந்த இந்த அன்னை மரியா திருவுருவத்தைக் கண்டெடுத்தனர் அதில் நானே பிறரன்பு அன்னை மரியா எனவும் எழுதப்பட்டிருந்தது. இந்த திருவுருவம் எல் கோப்ரேவுக்கு எடுத்துவரப்பட்டு 1684ம் ஆண்டில் முதல் திருத்தலம் எழுப்பப்பட்டது. கியூபா விடுதலை அடைந்ததற்கு நன்றித் திருப்பலி 1898ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி இம்மரியா திருத்தலத்தில் நிறைவேற்றப்பட்டது. மரத்தாலான சிறிய இத்திருவுருவம் தங்க மேலாடையால் போர்த்தப்பட்டுள்ளது. அன்னை மரியா தனது இடது கரத்தில் குழந்தை இயேசுவைத் தாங்கியுள்ளார். கியூபா, இஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைவதற்கும்,  16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பர் சுரங்களில் வேலை செய்வதற்கு கொண்டுவரப்பட்ட ஆப்ரிக்க அடிமைகள் விடுதலை பெறுவதற்கும் இடம்பெற்ற போராட்டம் உட்பட பல அற்புதங்களை நிகழ்த்தியவராக, கோப்ரே பிறரன்பு அன்னை மரியா வல்லமை படைத்த அடையாளமாகப் போற்றப்படுகிறார். கியூப மக்களில் முப்பது விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் அக்கால ஆப்ரிக்க அடிமைகளின் வழிவந்தவர்களே.

கியூபாவின் பாதுகாவலராகிய கோப்ரே பிறரன்பு அன்னை மரியா திருவுருவத்தின் முன்னர் சிறிது நேரம் அமைதியாகச் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கியூபாவிலும், அந்நாட்டிற்கு வெளியேயும் வாழும் கியூப மக்களை அன்னை மரியிடம் அர்ப்பணித்து செபித்தார். அன்னைமரியாவுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய மெழுகுதிரிகளை முதலில் ஏற்றி, அன்னை மரியாவுக்கு ஒரு மிக அழகான வெள்ளியாலான மலர்கள் வைக்கும் பாத்திரம் ஒன்றையும், 12க்கும் மேற்பட்ட மஞ்சள் மற்றும் வெண்ணிற பீங்கான் வேலைப்பாடுகளால் நிறைந்த மலர்களையும் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அனைத்து கியூப மக்களையும் மலர்களுக்கு மத்தியில் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக இதனை அளித்தார். இந்தப் பாத்திரத்தில் மலர்களின் காம்புகள் வெள்ளியாலும், இதழ்கள் பளபளப்பான பீங்கான்களாலும் செய்யப்பட்டிருந்தன. கோப்ரே பிறரன்பு அன்னை மரியாவிடம் ஆயர்களுடன் சேர்ந்து செபித்த பின்னர் புனித பெரிய பேசில் பாப்பிறை குருத்துவக் கல்லூரி சென்று இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை. இத்துடன் இத்திங்கள் தின நிகழ்வுகள் நிறைவு பெற்றன. கியூப மக்களின் அடையாளமாக விளங்கும் இத்திருத்தலத்திற்கு, Earnest Hemingway அவர்கள், தான் பெற்ற நொபெல் விருது தங்க மெடலை 1953ம் ஆண்டில் அன்பளிப்பாக அளித்தார். 1998ல் புனித திருத்தந்தை 2ம் யோவான் பால், 2012ல் திருத்தந்தை 16ம் பெனடிக் ஆகிய இருவரும் இவ்வன்னைக்கு தங்கக் கிரீடத்தையும், தங்க ரோஜாவையும் காணிக்கையாகக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.